ஊழலுக்கு எதிராகப் பிரபோவோ எச்சரிக்கை

ஊழலுக்கு எதிராகப் பிரபோவோ எச்சரிக்கை

2 mins read
936d27ad-4e85-4b47-98f4-0479c8f6d342
தாம் நம்பியவர்களே ஊழலில் ஈடுபட்டுள்ளது மிகுந்த மனவேதனையை அளிப்பதாக இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்தார். - படம்: இபிஏ
Google News Preferred Icon

ஜகார்த்தா: ஊழல் குற்றங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்போவதில்லை என்று இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ எச்சரிக்கை விடுத்தார்.

வறுமையையும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையையும் போக்க அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தலைமையின்கீழ் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இலவச உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், இத்திட்டத்தின்கீழ் உணவருந்திய பலர் நச்சுணவால் பாதிக்கப்பட்டனர். இலவச உணவுக்காக இந்தோனீசிய அரசாங்கம் ஒதுக்கிய தொகை முழுமையாகத் திட்டத்தைச் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.

வழங்கப்பட்ட நிதியின் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்தி தரம் குறைந்த உணவு தயாரிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலவச உணவுத் திட்டத்தின் தலைவர் டாடான் ஹிண்டாயனாவும் அவரது இரண்டு துணைத் தலைவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டாடான் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று (ஜூன் 3) மேற்கு ஜாவாவில் நடைபெற்ற இலவச உணவுத் திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் பங்காளிகளுக்கான கூட்டத்தில் பேசினார் அதிபர் பிரபோவோ.

“மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக்கூடாது. இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

“நான் பெரிதும் நம்பி, முக்கியமான பொறுப்புகளை ஒப்படைத்தவர்களே இதில் ஈடுபட்டுள்ளது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது,” என்று அதிபர் பிரபோவோ உருக்கமாகக் குறிப்பிட்டார்.

விசாரணை நிலுவையில் உள்ளதாலும் சட்ட நடைமுறைகளில் தமது தலையீடு இருக்கக் கூடாது என்பதாலும் இந்த விவகாரம் குறித்து தற்போதைக்கு மேலும் கருத்து கூற அதிபர் பிரபோவோ மறுத்துவிட்டார்.

இந்த ஊழல் புகார்கள், ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய பொருளியலான இந்தோனீசியாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

வியாழக்கிழமையன்று (ஜூன் 4) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தோனீசிய ரூப்பியாவின் மதிப்பு 18,000 என்ற வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. அந்நாட்டுப் பங்குச் சந்தையும் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்