ஜெனீவா: ‘ஹிப்’ என்ற பெயரில் விற்பனையாகிய குழந்தைகளுக்கான உணவில் விஷக் கலவை கண்டறியப்பட்டதால் பாதுகாப்பு கருதி, அவற்றை நாடெங்கும் இயங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘ஸ்பார்’ பேரங்காடிகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆஸ்திரியாவின் காவல்துறை சனிக்கிழமை (ஏப்ரல் 18) தெரிவித்தது.
வாடிக்கையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 190 கிராம் எடையுள்ள கேரட், உருளைக் கிழங்கு உள்ளடங்கிய ஹிப் உணவு ஜாடிகளை சோதித்ததில் அவற்றில் ஒருவகை எலிக்கொல்லி விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று ஆஸ்திரியாவின் பெர்கன்லாந்து காவல்துறை, ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.
அபாயமான உள்ளடக்கம் உணவுக்குள் புகுந்துவிட்டதை மறுக்கமுடியாது என ஹிப் நிறுவனம் ஒப்புக்கொண்டது. அதன் கேரட், உருளைக்கிழங்கு கலந்த உணவுகள் அத்துமீறப்பட்டன எனவும் அவற்றை உட்கொள்வது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்றும் நிறுவனம் பொதுமக்களை எச்சரித்தது.
ஆஸ்திரிய உணவு விநியோகத்தில் குற்ற நடவடிக்கைகள் நடந்திருக்கலாம் என ஹிப் நிறுவனம் சந்தேகிக்கிறது.
பாதிக்கப்பட்ட உணவு ஜாடிகளின் அடிபாகத்தில் சிவப்பு வட்டம் குறிக்கப்பட்டு, அதன் மூடிகள் பாதுகாப்பில்லாமல் திறக்கப்பட்டு அல்லது சேதப்பட்டு, வழக்கத்துக்கு மாறான வாடை அவற்றில் இருந்து வரும் என்று காவல்துறை விளக்கியது.
ஐரோப்பிய நாடுகளில் சோதனை நடந்துள்ளது
அவைபோன்ற உணவு ஜாடிகள் செக் குடியரசு, ஸ்லோவேக்கியா நாடுகளில் நடந்த ஆய்வுகளில் சோதிக்கப்பட்டதில் நச்சுப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது எனவும் ஆஸ்திரிய காவல்துறை தெரிவித்தது.
ஜெர்மனியில் நடந்த விசாரணைக்குப் பிறகு இந்த தகவல்கள் வெளிவந்தாக ஆஸ்திரிய காவல்துறை கூறியது. மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

