அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதித்திட்டம்; மலேசியா விசாரணை

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதித்திட்டம்; மலேசியா விசாரணை

2 mins read
432ac747-c3d2-46f6-9231-7bd64a51cfaf
மத்தியக் காவல்துறையின் ரகசியக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணையைக் கையாள்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்து, தேசிய நிலைத்தன்மையைக் கீழறுக்கச் சதித்திட்டம் தீட்டப்படுவதாகச் சந்தேகிக்கப்படுவதன் தொடர்பில், மலேசியக் காவல்துறை உயர்நிலை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சதித்திட்டத்தைச் செயல்படுத்த, உள்ளூரைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் அனைத்துலக ஊடக அமைப்பு ஒன்றுடன் ஒன்றிணைந்து செயல்படுவதாக வெளியான தகவல்களின் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகக் காவல்துறைத் தலைமை அதிகாரி முகமது காலிட் இஸ்மாயில் கூறினார்.

அதோடு, அந்தச் சந்தேகத்துக்குரிய சதித்திட்டத்திற்கு, செல்வாக்குமிக்க குடும்பம் ஒன்று காரணம் என்று கூறப்படுகிறது.

நீதிமன்ற வழக்கில் சிக்கியிருக்கும் அந்தக் குடும்பம், அரசாங்கத்தையும் பிரதமர் அன்வார் இப்ராகிமையும் களங்கப்படுத்தும் நோக்கில், இங்கிலாந்தில் உள்ள ஊடக ஆலோசனை நிறுவனம் ஒன்றை நாடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சமூக ஊடகத்தில் காவல்துறைப் புகார் அறிக்கையின் பிரதி பரவி வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதை அது காட்டுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி பற்றி வெளிநாட்டுச் செய்தி அறிக்கை ஒன்றைப் படித்த பிறகு, செய்தியாசிரியர் ஒருவர் காவல்துறையில் புகார் செய்ததாக அறிக்கை காட்டியது.

அந்தக் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரைச் சந்தித்து, ஆவணப்படம், வாழ்க்கை வரலாறு ஆகியவற்றின் தொடர்பில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பைப் பற்றிப் பேசியதாக அந்தச் செய்தியாசிரியர் கூறினார்.

அதன் பிறகு அரசாங்கத்தைத் தாக்கும் விவகாரம் குறித்து ‘ஸூம்’ கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் அவர் சொன்னார். அதனைத் தொடர்ந்து, அதில் ஈடுபட மறுத்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், மத்தியக் காவல்துறையின் ரகசியக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணையைக் கையாள்வதாக திரு முகமது காலிட் தெரிவித்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைவழக்குதீங்குமலேசியா