ஜார்ஜ் டவுன்: இந்தியாவுடனான விமானச் சேவையை அதிகரிக்கும் எண்ணத்தில் பினாங்கு களமிறங்கியுள்ளது.
சென்னை-பினாங்கு விமானச் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது பினாங்கு மேலும் ஓர் இந்திய நகருக்கு நேரடி விமானச் சேவையைப் பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறது.
பினாங்கு மாநிலத்தின் சுற்றுலா மற்றும் புத்தாக்கப் பொருளியல் குழுவின் தலைவர் வோங் ஹான் வாய் இதன் தொடர்பில் இண்டிகோ நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திரு வோங் சென்னை சென்றிருந்தார். அங்கு அவர் இண்டிகோ நிறுவனத்தின் முக்கிய தலைமை அதிகாரிகளைச் சந்தித்தார்.
“ஒப்பந்தம் முடிவான பிறகு முழு விவரங்கள் வெளியிடப்படும்,” என்று தமது அறிக்கையில் வோங் குறிப்பிட்டார்.
பினாங்கு-சென்னை இடையிலான நேரடி விமானச் சேவை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை இரு பகுதிகளுக்கும் இடையில் 770க்கும் அதிகமான விமானப் பயணங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 100,000க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். விமானங்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டு இருக்கைகள் நிரப்பப்படுகின்றன.
2025ஆம் ஆண்டு மட்டும் 44,000க்கும் அதிகமான இந்தியப் பயணிகள் பினாங்கு சென்றுள்ளனர்.

