ஆப்கானிஸ்தான்மீது பாகிஸ்தானின் தாக்குதல்; பலர் மரணம்

ஆப்கானிஸ்தான்மீது பாகிஸ்தானின் தாக்குதல்; பலர் மரணம்

2 mins read
e5fdb687-99ae-4333-b2ac-60b5b2f4757d
ஆப்கானிஸ்தானின் மூன்று இடங்கள்மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சாம்கானி: பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 29 கிளர்ச்சியாளர்கள் மாண்டதாகப் பாகிஸ்தான் திங்கட்கிழமை (ஜூன் 29) தெரிவித்துள்ளது.

கராச்சியில் உள்ள பாகிஸ்தானின் துணை ராணுவக் கண்காணிப்பு வீரர்களின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகக் கிளர்ச்சியாளர்கள் தாக்கப்பட்டனர் என்று அது கூறியது.

நாட்டில் உள்ள பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களுக்குப் பதிலடியாகவும் பாகிஸ்தானின் தாக்குதல் இடம்பெற்றதாக அந்நாட்டுத் தகவல் அமைச்சர் அட்டா தாரார் குறிப்பிட்டார்.

ஜமாட் அல் அஹ்ரார், ஃபிட்னா அல் குவாரிஜ் ஆகிய குழுக்களுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களின் மறைவிடங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தாரார் சொன்னார்.

“பாகிஸ்தான் - ஆப்கான் எல்லைப் பகுதியில் நன்கு திட்டமிடப்பட்ட புலனாய்வு அடிப்படையிலான தரைவழி தாக்குதலைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மேற்கொண்டனர்,” என்றார் அவர்.

கிட்டத்தட்ட 2,600 கிலோமீட்டர் நீலமுள்ள எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் 53 இடங்களில் தாக்குதல் நடத்தினர். அதற்குப் பதிலடியாக, இவ்வாண்டு பிப்ரவரி 26ஆம் தேதி, பாகிஸ்தான் ‘ஆப்பரே‌‌ஷன் கஸாப் லில்-ஹக்’ என்ற தாக்குதலை மேற்கொண்டது.

பாக்டியா, பாக்டிகா, கூனார் ஆகிய பகுதிகள்மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் அவை அழிக்கப்பட்டன என்ற தாரார், 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார்.

மராகிஸ் உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய அளவிலான ஆயுதங்களும் வெடிமருந்தும் அழிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 36 குடிமக்கள் மாண்டதுடன் 163 பேர் காயமடைந்ததாகத் தலிபான் அரசாங்கம் கூறியது.

உள்ளூர்வாசிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட தாக்கப்பட்ட வட்டாரத்தில் கூடியபோது இரண்டாவது முறையாக அதே இடம் தாக்கப்பட்டதாக துணை அரசாங்கப் பேச்சாளர் ஹம்டுல்லா ஃபிட்ராட் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்