காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் பாகிஸ்தான் கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அதேபோல் தாக்குதலில் 250 பேர் காயமடைந்திருக்கலாம் என்று ஆப்கானிஸ்தான் தரப்பு கூறுகிறது. போதைப்பொருள் புழக்கத்திலிருந்து விடுபட நடத்தப்படும் முகாமில் திங்கட்கிழமை (மார்ச் 16) இரவு 9 மணி வாக்கில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் தாக்குதல் நடவடிக்கையை ஆப்கானிஸ்தான் கடுமையாகக் கண்டித்துள்ளது. நோன்பு துறக்கக் கூடியிருந்த மக்கள்மீது தாக்குதல் நடத்தியது மனிதாபிமானமற்ற செயல் எனவும் அது தெரிவித்தது.
வேண்டும் என்றே பொதுமக்கள் வாழும் பகுதியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்கள் மீதுதான் தாக்குதல் நடத்தினோம் என்று அந்நாட்டு ராணுவம் சொன்னது.
தாக்குதல்கள் ஓய்ந்த பிறகு மீட்புப் பணிகள் இரவு 10 மணிவாக்கில் தொடங்கின. அப்போது குறைந்தது 30 சடலங்கள் மீட்கப்பட்டன.
“சம்பவ இடத்தில் பல அவசர உதவி வாகனங்கள் இருந்தன. தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த கட்டடங்களைத் தீயணைப்பு வீரர்கள் அணைத்துக் கொண்டிருந்தனர்,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான பூசல் நிலவுகிறது. இரு நாடுகளும் ஒன்றை ஒன்று மாறிமாறித் தாக்கி வருகின்றன.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அரசாங்கம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது. ஆப்கானிஸ்தான் ஆதரவில் உள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லைகளில் தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பிப்ரவரி 26ஆம் தேதி மோதல்கள் தீவிரமடைந்ததிலிருந்து, பொதுமக்கள் பலர் பலியாயினர். மார்ச் 13ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள ஐநா தூதரகம் இருநாட்டு மோதலில் 75 பேர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது.

