ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில பக்கத்தான் ஹரப்பான், ஜோகூர் தேர்தலில் 56 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஞாயிற்றுக்கிழமை (மே 17) தெரிவித்தது.
முன்னதாக தேசிய முன்னணியும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்தது.
இதையடுத்து பக்கத்தான் ஹரப்பானின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோகூர் தேசிய முன்னணியின் அறிவிப்பைத் தொடர்ந்து நாங்களும் 56 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்தோம் என்று ஜோகூர் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அமானூல்ஹுடா ஹசன் கூறினார்.
இம்முடிவிலிருந்து பக்கத்தான் ஹரப்பான் பின்வாங்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஜோகூர் தேசிய முன்னணி கூட்டணி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியது. வரப்போகும் தேர்தலிலும் இது மீண்டும் நிகழும்,” என்றார் அவர்.
ஜோகூரில் பெர்சாடா ஜோகூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் மாநாட்டில் அவர் பேசினார்.
ஜோகூர் அமானா கட்சியின் தலைவருமான அமானூல்ஹுடா, அண்மையில் தேர்ந்தெடுக்கப்படாத நான்கு பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதை குறைகூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய முன்னணி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அவ்வாறு செய்துள்ளது. அது, குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் ஆதரவை இழக்க நேரிடும் என்று அஞ்சுவதாகவும் அவர் சொன்னார்.
ஜோகூர் மாநிலத்தில் உள்ள 26 நாடாளுமன்ற இடங்களில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 14 இடங்களைக் கைப்பற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஜோகூரில் தமது கூட்டணிக்கு வலுவான ஆதரவு இருப்பதாகக் கூறினார்.
முன்னதாக மலேசியாவை ஆளும் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானின் தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை (மே 17) ஜோகூரில் பிரம்மாண்டமாகத் தொடங்கியது.
பிரதமர் அன்வார் இப்ராகிமின் கட்சியான கெஅடிலான், ஜனநாயகச் செயல் கட்சி(டிஏபி), அமானா ஆகியவற்றின் 5,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
‘மடானி உறுதிப்பாடு, மக்களின் நம்பிக்கை’ என்பது மாநாட்டின் கருப்பொருளாகும்.
பக்கத்தான் தொடர்பாளர் ஃபாமி ஃபட்சில், “டிஏபி, அமானா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உரையாற்றுவார்கள்,” என்று தெரிவித்திருந்தார்.
இம்மாநாட்டில் பக்கத்தான் தலைவரும் பிரதமருமான திரு அன்வார், வரப்போகும் ஜோகூர், மலாக்கா மாநிலத் தேர்தல்களை நோக்கிய கூட்டணியின் இலக்கு குறித்தும் 16வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஜோகூர் மாநில தேசிய முன்னணியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான ஒன் ஹஃபிஸ் காஸி, ஜோகூர் மக்கள், அத்துடன் அம்னோ மற்றும் மாநில தேசிய முன்னணியின் அடித்தளத் தலைவர்களின் கருத்துகளை அறிந்த பிறகே அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.

