மயாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலப் பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ‘சேட்ஜிபிடி’ செயற்கை நுண்ணறிவுக்குச் சம்பந்தம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபருக்கும் ‘ஓப்பன்ஏஐ’ (OpenAI) நிறுவனத்தின் ‘சேட்ஜிபிடி’ தொழில்நுட்பத்துக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் பார்வையிட்டனர். அதையடுத்து ‘சேட்ஜிபிடி’ தொடர்பான விசாரணையைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டது.
ஃபுளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஃபீனிக்ஸ் இக்னர் என்ற சந்தேக ஆடவர் மாணவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் மாண்டனர், ஆறு பேர் காயமடைந்தனர்.
உள்ளூர்த் துணைக் காவல் அதிகாரி ஒருவரின் மகனான இக்னர், தமது தாயின் பழையத் துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து சம்பவ இடத்தில் இக்னர், அதிகாரிகளால் சுடப்பட்டுப் பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் ‘சேட்ஜிபிடி’ ‘உடந்தையாக’ இருந்ததா என்பது ஆராயப்படும் என்ற அதிகாரிகள், சேட்ஜிபிடிக்கும் சந்தேக ஆடவருக்கும் இடையே நடந்த உரையாடல்களை வெளியிடவில்லை.
எனினும், துப்பாக்கிச்சூட்டுக்கும் சேட்ஜிபிடிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஓப்பன்ஏஐ பேச்சாளர் குறிப்பிட்டார்.
‘சேட்ஜிபிடி’, கேட்ட கேள்விகளுக்கு ஆதாரபூர்வமானத் தகவல்களைத் தந்தது என்றும் அத்தகைய தகவல்களை இணையத்தில் வேறெந்த தளத்திலிருந்தும் தாராளமாகப் பெறலாம் என்றும் பேச்சாளர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக ஆடவருடன் தொடர்புடைய சேட்ஜிபிடி கணக்கை ஓப்பன்ஏஐ அடையாளம் கண்டு காவல்துறையிடம் பகிர்ந்துகொண்டது.
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதை அடுத்து ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமம் குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்படும்படி பல கோரிக்கைகள் எழுந்துள்ளன.


