அமெரிக்கா, கனடா இடையே புதிய பாலம் திறக்கப்படும்

அமெரிக்கா, கனடா இடையே புதிய பாலம் திறக்கப்படும்

2 mins read
fec63e3b-16e8-4b1b-8f40-eb8f05fa76ac
2018ல் தொடங்கப்பட்ட இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிக்கான பணத்தை வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டதால் கனடா இதற்கான முழுச் செலவையும் ஏற்றது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வா‌‌ஷிங்டன்: அமெரிக்காவின் ட்ராயிட் நகரையும் கனடாவின் ஒன்டாரயோ மாநிலத்திலுள்ள வின்ட்சர் நகரங்களை இணைக்கும் பாலம் கூடிய விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தர்.

4.7 பில்லியன் அமெரிக்க டாலர் (S$6 பில்லியன்) செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. 

பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இதனைத் தாம் திறக்க விடப்போவதில்லை என்று அச்சுறுத்திய போதிலும் இந்தப் பாலம் திறக்கப்பட உள்ளது.

பாலத்திற்கான திறப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோர்டி ஹோவ் அனைத்துலகப் பாலம் (Gordie Howe International Bridge) ஜூன் 15ல் போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என்று ஊடகங்கள் ஜூன் 8ல் செய்தி வெளியிட்டன.

அமெரிக்க மதுபானங்கள் சிலவற்றின் விற்பனையைக் கனடா மறுப்பது, பால் பொருள்கள் மீதான கனடாவின் வரிகள், சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஆகியவையே, பாலத்தைத் திறக்க தான் அனுமதிக்காததற்கான காரணங்கள் என்று திரு டிரம்ப், கடந்த பிப்ரவரி மாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வாஷிங்டனில் உள்ள கனடியத் தூதரகமும், மிச்சிகன் ஆளுநர் கிரெட்சென் விட்மரின் செய்தித் தொடர்பாளரும் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். வெள்ளை மாளிகையும் உடனடியாகக் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியப் பொருளியல் இணைப்பாகத் திகழவுள்ள இந்தப் பாலத்தை ஜூன் 21ல் திறப்பதற்கான பணிகளில் திட்டக் குழு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

அமெரிக்கா நிதியளிக்க மறுத்ததால், 2018ல் தொடங்கப்பட்ட இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்குக் கனடாவே நிதியளித்தது. அடுத்த 30 ஆண்டுகளுக்குச் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் வாயிலாக இந்தச் செலவுகள் ஈடுகட்டப்படும் என்றது கனடிய தரப்பு.

எனினும், கோர்டி ஹோவ் பாலத்திற்குப் பணியாளர்களை நியமிக்கத் தங்கள் துறை தயாராக உள்ளதாக கடந்த வாரம் நடந்த செனட் சபைக் கூட்டத்தில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் மார்க்வெய்ன் முலின் தெரிவித்தார்.

அமெரிக்க-கனடா எல்லையில் உள்ள மிகப்பெரிய சரக்குத் துறைமுகமான டெட்ராயிட்டுக்குள் செல்லும் அம்பாசிடர் பாலத்தில் லாரிகளின் நெரிசலைக் குறைக்க இந்தப் புதிய பாலம் உதவும். 2023ன் நிலவரப்படி, வணிக லாரிகள் மூலமாக 126 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை அம்பாசிடர் பாலம் கையாண்டுள்ளது.

இந்தப் பாலம், எல்லையைக் கடக்கும் நேரத்தை 20 நிமிடங்கள் குறைக்கும் என்றும், இதனால் அடுத்த 30 ஆண்டுகளில் லாரி ஓட்டுநர்களுக்கு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மிச்சமாகும் என்றும் வின்ட்சர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காகனடாபாலம்கட்டுமானம்