ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல்; இறங்கிய எண்ணெய் விலை மீண்டும் ஏறியது

ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல்; இறங்கிய எண்ணெய் விலை மீண்டும் ஏறியது

2 mins read
84be70cb-4d35-47f6-8027-84d09d345c99
ஹோர்முஸ் நீரிணையில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விலைகள் திங்கட்கிழமை (மே 25) ஏழு விழுக்காட்டுக்கும் மேல் குறைந்ததற்குப் பிறகு, மீண்டும் அதிகரித்துள்ளது.

ஈரான்மீது புதிய தாக்குதல் நடந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதன் தொடர்பில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 98 அமெரிக்க டாலருக்குக் கூடியது. அதே நேரத்தில் வெஸ்ட் டெக்சஸ் எண்ணெய் விலை 91 அமெரிக்க டாலரைத் தொட்டது.

அமெரிக்க-ஈரான் உடன்பாடு நெருங்கிவிட்டதாகக் கூறப்பட்ட வேளையில் அமெரிக்கப் படைகள் ஈரானின் ஏவுகணைத் தளங்களையும் கண்ணி வெடிகளைப் புதைக்க முயன்ற படகுகளையும் தாக்கியதாக அமெரிக்க மத்திய தளபத்தியத்தைச் சுட்டிக்காட்டி நியூயார்க் டைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.

அந்தத் தாக்குதலால் இறங்கியிருந்த எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தது.

ஈரானின் கடலோர நகரமான சிரிக், ஜாஸ் அருகே நீரிணையைச் சுற்றிப் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன என்று ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

முன்னதாக, பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பதிவிட்டிருந்தார். அம்முயற்சி தோல்வியுற்றால் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் அச்சுறுத்தியிருந்தார். அதனால் வாரத்தின் தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டது.

சமரசப் பேச்சில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைவர், ஓர் ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாகச் சீனாவிடம் தெரிவித்திருந்தார்.

அமைதிக் காலத்தில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கியப் பாதையாக விளங்கிய ஹோர்முஸ் நீரிணை, அமெரிக்கா மற்றும் ஈரானின் முற்றுகையால் மூடப்பட்டுள்ளது.

அண்மைத் தாக்குதல் தற்காப்பை நோக்கமாகக் கொண்டது என்று அமெரிக்க மத்திய தளபத்தியம் விவரித்ததாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்