போருக்கு வேகமாகத் தயாராகுமாறு ராணுவத்துக்கு வடகொரியத் தலைவர் உத்தரவு

போருக்கு வேகமாகத் தயாராகுமாறு ராணுவத்துக்கு வடகொரியத் தலைவர் உத்தரவு

2 mins read
67e1802c-6bcd-4850-b482-9e09653d7e47
வடகொரிய ஆளும் கட்சியான கொரிய உழைப்பாளர் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பேசினார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சோல்: போருக்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறியதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்து உள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா வடகொரியாவுடனான மோதல் போக்கை அதிகரிப்பதற்குப் பதிலடியாக, போர் தொடுக்கும் எண்ணத்தில் திரு கிம் தமது ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.

குறிப்பாக, சண்டைக்கான முயற்சிகளில் தீவிரம் காட்டுமாறு வெடிமருந்து மற்றும் அணுவாயுதத் துறைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார் என்று அந்த ஊடகம் வியாழக்கிழமை (டிசம்பர் 28) கூறியது.

“வடகொரியாவின் ‘பீப்பள்ஸ் ஆர்மி’ எனப்படும் ராணுவப் படை, வெடிமருந்துத் தொழிற்சாலை, அணுவாயுதத் தயாரிப்புத் தொழிற்சாலை மற்றும் குடிமைத் தற்காப்புத் துறைகள் போருக்கான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று கிம் கேட்டுக்கொண்டுள்ளார்,” என்று வடகொரிய கேசிஎன்ஏ ஊடகம் தெரிவித்து உள்ளது.

உக்ரேன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கி ஆதரிப்பதாக வடகொரியா மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில், ரஷ்யாவுடனான தமது உறவை வடகொரியா வலுப்படுத்தி வருகிறது. அதேபோல, ரஷ்யாவும் வடகொரிய ராணுவத்திற்குத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகிறது.

ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் சுயேச்சை நாடுகளுடனான உத்திபூர்வ ஒத்துழைப்பை பியோங்யோங் விரிவுபடுத்தும் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

புத்தாண்டுக்காக வகுக்கப்பட்டு இருக்கும் கொள்கைகள் தொடர்பாக விவாதிக்க நாட்டின் ஆளும் கட்சி புதன்கிழமை (டிசம்பர் 27) நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு திரு கிம் பேசினார்.

நாட்டின் பொருளியலை மேம்படுத்துவதிலும் திரு கிம் முனைப்புடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

வடகொரியாவுக்கான ஐந்தாண்டு மேம்பாட்டுத் திட்டத்தை நிறைவேற்ற புத்தாண்டு ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்று கிம் அந்தக் கூட்டத்தில் கூறியதாக கேசிஎன்ஏ கூறியது

குறிப்புச் சொற்கள்
வடகொரியா