சீனா சென்றடைந்த தென்கொரியா அதிபர் லீ ஜே மியுங்

சீனா சென்றடைந்த தென்கொரியா அதிபர் லீ ஜே மியுங்

2 mins read
5e77e2cf-02ad-4c66-b01e-960674fa6aa4
தென்கொரியா அதிபர் லீ ஜே மியுங்கும் (நடுவில்) அவரது துணைவியார் கிம் ஹியா கியுங்கும் சீனாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

‌‌‌‌ஷாங்காய்: சீனாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) ஷாங்காய் நகரைச் சென்றடைந்தார்.

திரு லீயுடன் 200க்கும் அதிகமான தென்கொரிய வர்த்தகத் தலைவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் விநியோகத் தொடர் முதலீடு, மின்னிலக்கப் பொருளியல், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் ஆகியவை குறித்து சீனத் தலைவர்களுடன் கலந்துரையாடவிருப்பதாக சீனாவின் சிசிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிபராகப் பதவியேற்றதை அடுத்து திரு லீ முதன்முறையாகச் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, தென்கொரியாமீது வடகொரியா தொலைதூர ஏவுகணையைப் பாய்ச்சியுள்ளது. திரு லீ, சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட அதே நாளில் வடகொரியா ஏவுகணைகளைப் பாய்ச்சியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெனிசுவேலாமீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கலஸ் மதுரோவைச் சிறைபிடித்துச் சென்ற சில மணி நேரங்களில் வடகொரியா தென்கொரியாமீது ஏவுகணைப் பாய்ச்சியிருப்பது அனைத்துலக அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள திரு லீ, கொரியத் தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதிலும் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதிலும் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறினார்.

இரு கொரியாக்களுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள கடல்பகுதியில் ஏவுகணைகளைப் பாய்ச்சியதன் மூலம் தென்கொரியாவுடன் நெருக்கமாகப் பழகுவதைச் சீனா நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற செய்தியை வடகொரியா கூற விரும்புவதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

அணுவாயுத, ராணுவ சக்தி கொண்ட வடகொரியா வெனிசுவேலாவைவிட மாறுபட்ட நாடு என்பதை வலியுறுத்தவும் ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.

வெனிசுவேலாவில் இப்போது நடப்பதைப் பார்த்து மிகுந்த அச்சத்தில் இருக்கிறார் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் என்றார் யோன்செய் பல்கலைக்கழகப் பேராசிரியர் பொங் யங்‌ஷிக்.

வடகொரியாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குத் தென்கொரியாவும் ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அவசரக் கூட்டத்தை நடத்திய தென்கொரிய அதிபர் அலுவலகம், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்புக் கூட்ட தீர்மானங்களை மீறும் வகையில், சினத்தைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளை வடகொரியா நிறுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வடகொரியாதென்கொரியாஏவுகணைதாக்குதல்