மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு மரண தண்டனை விதிக்க உத்தேசம் இல்லை: மலேசிய அமைச்சர்

மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு மரண தண்டனை விதிக்க உத்தேசம் இல்லை: மலேசிய அமைச்சர்

2 mins read
31519b65-fe0e-4c81-86fc-4e76f05ad986
சாலை விபத்தில் மாண்டோரின் குடும்பத்துக்கு விபத்துக்குக் காரணமானவர் இழப்பீடு வழங்கப்படுவது குறித்து அரசாங்கம் ஆலோசிப்பதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு மரண தண்டனையை அறிமுகம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.

கடுமையான சாலைக் குற்றங்கள் புரிவோர்மீது நடவடிக்கை எடுக்க தற்போதுள்ள சட்டத்தில் போதுமான அவகாசம் இருப்பதாகக் கூறிய திரு லோக், தேவை ஏற்பட்டால் குற்றவாளிமீது கொலைக் குற்றம் சுமத்தவும் சட்டத்தில் இடமுண்டு என்று தெரிவித்தார்.

“அரசாங்கத்தைப் பொறுத்தவரை கட்டாய மரண தண்டனைகளை ஏற்கெனவே நிறுத்துவிட்டோம்,” என்று சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சிக்குப்பின் திரு லோ செய்தியாளர்களிடம் சொன்னார்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்தை அறிமுகம் செய்யும்படி எதிர்க்கட்சிகள் அழைப்புவிடுத்தாலும் அவ்வாறு செய்ய எந்த எண்ணமும் இல்லை என்று திரு லோக் விளக்கம் அளித்தார்.

மாறாக, சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான ஆதரவை வலுப்படுத்த சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் ஆலோசிக்கிறது என்றார் திரு லோக்.

ஒருவர்மீது சுமத்தப்பட்ட சாலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிப்பதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிசெய்யவிருக்கிறோம் என்று திரு லோக் கூறினார்.

“தற்போது, சிவில் நடவடிக்கை மூலம்தான் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்கிறது. அதற்கான நடைமுறையை நிறைவேற்ற நீண்டகாலம் தேவைப்படுகிறது,” என்று திரு லோக் குறிப்பிட்டார்.

ஜூன் மாதத்தில் நாடாளுமன்றம் ஒன்றுகூடும்போது சாலைப் போக்குவரத்து திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய அரசாங்கம் முற்படுகிறது என்றார் திரு லோக்.

கிள்ளானில் உள்ள ஜாலான் ராயா பராட் என்ற பகுதியில் ஏற்பட்ட மோசமான சாலை விபத்தை முன்னிட்டு திரு லோக்கின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

மது அருந்திவிட்டு கார் ஓட்டிய ஒருவர் மோட்டார்சைக்கிளோட்டிமீது மோதியதில் மோட்டார்சைக்கிளோட்டி மாண்டார்.

குறிப்புச் சொற்கள்