வாஷிங்டன்/ துபாய்: ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான சண்டை நிறுத்த ஒப்பந்தம் இவ்வார இறுதியில் எட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை (ஜூன் 1) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால் ஈரான், தனது தரப்பில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
ஒருவேளை அமெரிக்கா-ஈரான் சண்டை நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் மூன்று மாதகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கிய அரசதந்திர முன்னேற்றமாக இது பார்க்கப்படும்.
இந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் உலகளாவிய எரிசக்தி விலைகள் கூடி உலகப் பொருளியலுக்கு உலை வைத்துள்ளது.
“பல அம்சங்களை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது, இன்னமும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முடிவு எடுக்கப்படவில்லை, ஈரான் தனது உரிமையை விட்டுக்கொடுக்காது,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேயைச் சுட்டிக்காட்டி அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“இவ்விவகாரத்தில் நாங்கள் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை,” என்றார் அவர்.
இது ஒரு முக்கியமான பிரச்சினை என்றும் சம்பந்தப்பட்டுள்ள அமைப்புகள் பரிசீலனை செய்துவருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுடனான போரில் சிறந்த தீர்வைக் கண்டுள்ளதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒப்பந்தம் கையெழுத்தானதும் ஹோர்முஸ் நீரிணை அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும். விரைவில் அது நடக்கும். ஒருவேளை, வாரயிறுதியில் ஐரோப்பாவில் அது கையெழுத்தாவதை எதிர்பார்க்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் சார்பில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கையெழுத்திடுவார் என்று அவர் கூறினார்.
ஈரானின் உச்சத் தலைவரான மொஜ்தபா காமெனி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளாரா என்று கேட்டதற்கு ஆம் என்று தமக்குத் தெரிய வந்ததாக திரு டிரம்ப் பதிலளித்தார்.
ஈரான்மீதான திட்டமிடப்பட்ட ராணுவத் தாக்குதலை ரத்து செய்த திரு டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குகளின் விலைகள் அதிகரித்தன, எண்ணெய் விலைகள் சரிந்தன.

