கோலாலம்பூர்: சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்களுக்காகப் புதிய காப்புறுதித் திட்டம் உருவாக்கப்படும் என்று மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் அறிவித்துள்ளார்.
அன்றாடம் எல்லைகடந்து வேலை செய்யும் மலேசியர்களின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாகப் புதிய திட்டம் கொண்டுவரப்படுவதாக அவர் கூறினார்.
புதிய காப்புறுதித் திட்டம் ஏறத்தாழ 400,000 மலேசியர்களுக்குப் பலனளிக்கும். ஜோகூரில் இருந்து தினமும் சிங்கப்பூர் வந்து வேலை செய்துவிட்டு நாடு திரும்பும் மலேசியர்களுக்கு, வேலை நேரத்திற்குப் பின்னரும் சமூகப் பாதுகாப்பை அந்தக் காப்புறுதித் திட்டம் வழங்கும் என்று கூறப்படுகிறது.
“வேலையிடத்திலிருந்து வீடு திரும்பும் மலேசியர்களின் பயணத்தின்போது என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவர்களுக்குரிய காப்புறுதித் திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை,” என்று திரு ரமணன் ‘த ஸ்டார்’ செய்தித்தாளுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் குறிப்பிட்டார்.
“மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் வேலைக்காகச் சென்றுவரும் மலேசியர்களுக்கான காப்புறுதித் திட்டம் எதுவும் நடப்பில் இல்லை எனில், புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
“சிங்கப்பூரில் வேலைசெய்யச் சென்றதால் ஒருவர் பாதிக்கப்பட்டார் என்ற நிலை ஏற்படக்கூடாது. மலேசியாவிலிருந்து செல்லும் ஊழியர்களுக்குத் தரமான பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து,” என்றும் அமைச்சர் ரமணன் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், புதிய காப்புறுதித் திட்டம் தமது முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது என்றார் அவர்.
சிங்கப்பூரில் 1.18 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் வேலை செய்வதாக மதிப்பிடப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் 300,000க்கும் 400,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மலேசியர்கள் தினமும் கடற்பாலம் வழியாக சிங்கப்பூர் சென்று திரும்புகின்றனர்.
மலேசிய ஊழியர்கள் வரவேற்பு
இந்நிலையில், புதிய காப்புறுதித் திட்டத்தை, மலேசியாவிலிருந்து வேலை செய்ய சிங்கப்பூர் வருவோரில் பலரும் வரவேற்றுள்ளனர்.
‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் பேசிய துப்புரவாளர் முஹம்மது ஹைஸட் மஸ்லான், 23, தாம் தினமும் மோட்டார் சைக்கிளில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து செல்வது பதற்றமானதாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது என்றார்.
“சிங்கப்பூர் வர ஒரு மணிநேரம். இங்கிருந்து மலேசியா செல்ல ஒரு மணிநேரம். ஆக, இந்த இரண்டு மணிநேர மோட்டார் சைக்கிள் பயணத்தில் விபத்து நிகழக்கூடும். அப்படி ஏதாவது நிகழ்ந்தால், அதனால் ஏற்படும் இழப்புகளை அவரவரே ஏற்கவேண்டிய நிலை உள்ளது.
“தற்போது காப்புறுதித் திட்டம் குறித்து மலேசிய அரசாங்கம் கவனம் செலுத்துவது மனத்துக்கு ஆறுதலாக உள்ளது. வேலை நேரத்திற்குப் பிந்திய, அவசியமான பாதுகாப்பு அதன்மூலம் கிட்டும்,” என்றார் அந்த ஊழியர்.
தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக சிங்கப்பூரில் வேலை செய்யும் கே. பிரபாகரன், 35, என்பவரும் காப்புறுதித் திட்டத்தை வரவேற்றார்.
“நடப்பில் உள்ள சில காப்புறுதித் திட்டங்கள் சில குறிப்பிட்ட அம்சங்களையே உள்ளடக்கி உள்ளன. புதிய திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சாலைகள் மோசமடைந்து வரும் நிலையில் முழுமையான காப்புறுதித் திட்டத்தை அமல்படுத்துவது அவசியம்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் 25 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்துவரும் திருவாட்டி சோஃபி டான், 57, காப்புறுதித் திட்டம் தேவையான ஒன்று என்றார்.
“நான் பேருந்தில் வந்து சென்றாலும், மலேசிய ஊழியர்கள் விபத்தில் சிக்கும் பல சம்பவங்களை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்,” என்றார் அவர்.

