மியன்மார் தேர்தல்: ராணுவ ஆதரவுக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு

மியன்மார் தேர்தல்: ராணுவ ஆதரவுக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு

2 mins read
010dcf7c-d3ed-491c-b738-ee83a8d5f450
மியன்மாரின் மண்டலேயில் ஜனவரி 25 நடைபெற்ற பொதுத்தேர்தலின் மூன்றாவது கட்டத்தின்போது மக்கள் வாக்களிக்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

நேப்பிடோ: ஒரு மாதம் நீடித்த மியன்மார் பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) நிறைவடைந்தது.

தேர்தலில் அந்நாட்டு ராணுவ ஆதரவுக் கட்சி வெற்றிபெறும் விளிம்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தால் ஆதரிக்கப்பட்ட கட்சி வெல்லும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டுவரும் இந்தத் தேர்தல், நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும் குறைகூறப்பட்டு வருகிறது.

மூன்று கட்டங்களைக் கொண்டிருந்த இந்தத் தேர்தலுக்கான வாக்களிப்பின் முதல் இரு கட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 28லும் இவ்வாண்டு ஜனவரி 11லும் நடைபெற்றன.

கிட்டத்தட்ட 55 விழுக்காட்டு வாக்காளர்கள் திரண்ட இந்தத் தேர்தலில் மக்களின் பங்களிப்பு, 2020லும் 2015லும் நடத்தப்பட்ட தேர்தலில் பங்குபெற்றதைவிடக் குறைவு.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சியைப் பதவியிலிருந்து விலக்கி, நாட்டை ராணுவ அரசாங்கம் 2021ல் கைப்பற்றியது.

இந்தத் தேர்தல் வழியாக அரசு அதிகாரம் மக்களுக்குத் திரும்ப அளிக்கப்படும் என ராணுவம் உறுதி கூறியுள்ளது.

இருந்தபோதும், திருவாட்டி சூச்சி ஓரங்கட்டப்பட்டு அவரது அரசியல் கட்சி கலைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பு ராணுவ ஆட்சியினருக்குச் சாதகமாகவே உள்ளது.

கடந்த தேர்தலில் திருவாட்டி சூச்சியின் என்எல்டி (NLD) கட்சி மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டி ராணுவம், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

நோபெல் பரிசு பெற்ற 80 வயது திருவாட்டி சூச்சி, தற்போது அறியப்படாத இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ராணுவ அரசாங்கத் தலைவர் மின் ஆங் ஹ்லியாங், சாதாரண உடை அணிந்து மண்டலேயிலுள்ள வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டார்.

“இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை. மக்களில் ஒருவனாக நானும் இருப்பதால் இதனை ஆதரிக்கிறேன்,” என்று திரு மின் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்