ஜகார்த்தா முருகன் கோயிலில் கோலாகலமான தைப்பூசத் திருவிழா

ஜகார்த்தா முருகன் கோயிலில் கோலாகலமான தைப்பூசத் திருவிழா

3 mins read
d636a06c-c00c-4497-a402-14d53d2e4ea8
ஜகார்த்தா முருகன் கோயிலில் பால் குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றிய பெண் பக்தர்கள். - படம்: ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம்
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகரான ஜகார்த்தாவில் பிரம்மாண்டமாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம் என அழைக்கப்படும் ஜகார்த்தா முருகன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.

ஜகார்த்தா முருகன் கோயிலின் தனித்துவ சிறப்புகள்

ஜகார்த்தாவில் காலிடெரெஸ் பகுதியில் அமைந்துள்ள அத்திருத்தலம், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய முருகன் கோயில்களில் ஒன்றாகும்.

முருகனின் அருளைப் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
முருகனின் அருளைப் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள். - படம்: ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம்

கம்பீரமான 40 மீட்டர் உயர ராஜகோபுரத்துடன் கூடிய பிரம்மாண்டமான இந்து ஆலயமாகவும் இது விளங்குகிறது. மேலும், 21 மீட்டர் (சுமார் 70 அடி) உயரமான பிரம்மாண்ட முருகன் சிலையை இங்கு நிறுவுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

ஜகார்த்தாவில் முருகன் கோயில் என்பது 75 ஆண்டுகால ஜகார்த்தா தமிழர்களின் கனவு என அக்கோயிலின் மூத்த ஆலோசகர் டாக்டர் எ.எஸ்.கோபாலன் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் 2018ஆம் ஆண்டு சனாதன தர்ம அறநிறுவனம் மேற்கொண்ட சீரிய பணியால் அவர்களின் கனவு நனவானதாகவும் அவர் கூறினார்.

கோயிலைக் கட்டியெழுப்புவதற்கு அளிக்கப்பட்ட நன்கொடையில் 50 விழுக்காடு மற்ற சமயத்தினர் வழங்கியது என்று கூறிய திரு கோபாலன், குறிப்பாக அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஆதரவு பேருதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

ஜகார்த்தாவின் சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அத்திருத்தலம் இந்தோனீசியாவில் ஓர் இந்து கலாசாரச் சின்னமாக உருவெடுத்து வருகிறது.

தைப்பூசப் பெருவிழா

2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு கண்ட அத்திருக்கோயிலின் இரண்டாவது தைப்பூசப் பெருவிழா இது.

ஜகார்த்தா மட்டுமன்றி இந்தோனீசியாவின் பாலி, ஜாவா ஆகிய பகுதிகளிலிருந்தும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் முருக பக்தர்கள் அங்கு வந்ததாகத் திரு கோபாலன் கூறினார்.

ஜனவரி 30ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச விழா, ஐந்து நாள் கோலாகலமாக நடந்தேறியது.

தைப்பூசத்தின் இரண்டாவது நாளில் உற்சவரின் வீதி உலா நடைபெற்றது என்றும் ஜகார்த்தாவில் இதுபோன்று நடப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.

மூன்றாவது நாள் நடந்த தைப்பூசப் பெருவிழாவில் 1,300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகக் கூறிய டாக்டர் கோபாலன், 108 பெண்கள் பால் குடம் எடுத்து முருகனை வழிபட்டனர் என்றார்.

இந்து சமயத்தினர் மட்டுமன்றி பௌத்த சமயத்தைச் சேர்ந்த சிலரும் அவ்விழாவில் கலந்துகொண்டது கூடுதல் சிறப்பாக அமைந்தது என அவர் தெரிவித்தார்.

ஜகார்த்தா முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூசப் பெருவிழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சனாதன தர்ம அறநிறுவனம் சார்பாகவும் கோயில் நிர்வாகம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துகொள்வதாக அக்கோயிலின் தலைவர் பி. செல்வேந்தர் கூறினார்.

மேலும், இவ்விழா ஜகார்த்தாவில் வசிக்கும் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, இந்தோனீசியா முழுவதிலும் வசிக்கும் இந்து வம்சாவளியினருக்கும் மிகவும் பெருமை அளிக்கும் ஒன்று என்றார் அவர்.

தைப்பூசப் பெருவிழாவில் 1,300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் எ.எஸ்.கோபாலன் கூறினார்.
தைப்பூசப் பெருவிழாவில் 1,300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் எ.எஸ்.கோபாலன் கூறினார். - படம்: ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம்
தைப்பூசப் பெருவிழாவின் இரண்டாம் நாளில் வீதி உலா வந்த உற்சவர்.
தைப்பூசப் பெருவிழாவின் இரண்டாம் நாளில் வீதி உலா வந்த உற்சவர். - படம்: ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம்
உற்சவரைத் தங்கள் தோள்களில் சுமந்துவந்த பக்தர்கள்.
உற்சவரைத் தங்கள் தோள்களில் சுமந்துவந்த பக்தர்கள். - படம்: ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம்
முதல் முறையாக வீதி உலா வந்த உற்சவரை நாட்டியம் ஆடி வரவேற்ற நடனக் குழுவினர்.
முதல் முறையாக வீதி உலா வந்த உற்சவரை நாட்டியம் ஆடி வரவேற்ற நடனக் குழுவினர். - படம்: ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம்
ஜகார்த்தா முருகன் கோயில் தலைவர் பி. செல்வேந்தர் (இடமிருந்து இரண்டாவது), மூத்த ஆலோசகர் டாக்டர் எ.எஸ். கோபாலன் (இடமிருந்து மூன்றாவது).
ஜகார்த்தா முருகன் கோயில் தலைவர் பி. செல்வேந்தர் (இடமிருந்து இரண்டாவது), மூத்த ஆலோசகர் டாக்டர் எ.எஸ். கோபாலன் (இடமிருந்து மூன்றாவது). - படம்: ஸ்ரீ சனாதன தர்ம ஆலயம்
கோயிலின் தோற்றம்.
கோயிலின் தோற்றம். - படம்: மைண்ட் டிரிப்
கோயிலின் வாயில்.
கோயிலின் வாயில். - படம்: மைண்ட் டிரிப்

இந்தோனேசியாவில் தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு

“ஜகார்த்தா முருகன் கோயில் தைப்பூசம் சிறப்பாக நடைபெற்றது. ஜகார்த்தா தமிழ் மக்கள் இவ்வாண்டு முழுமையாகக் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடியது மிகவும் நெகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுத்தது,” என இந்தோனீசியத் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்திரசேகரன் ராஜலிங்கம் தெரிவித்தார்.

மேலும், “எங்கும் தமிழ் மக்கள். எங்கும் தமிழ்க் குரல். பெரும்பாலான மக்கள் தமிழ்ப் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, புடவை அணிந்து வந்தனர். கோயில் விழா என்பதற்கு அப்பால் தமிழ் மொழியின் கலாசார வெளிப்பாடாக இவ்விழா இருந்தது,” என அவர் கூறினார்.

ஜகார்த்தா முருகன் கோயிலின் இளையர் அணி உறுப்பினராக இருக்கும் 25 வயது நிஷா பிரியங்கா, “இவ்வாண்டு நான் தைப்பூசத்தை இங்கு கொண்டாடினேன். தமிழ்ச் சமூகம் எவ்வளவு ஒன்றுபட்டு இருக்கிறது என்பதை இந்த விழாவில் அறிந்துகொண்டேன்,” என்று குறிப்பிட்டார்.

பெரு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவர், “இவ்வாண்டு, முருகனின் முன் நடனமாடும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. அதை நான் வெறும் வாய்ப்பாக மட்டும் பார்க்கவில்லை. எனக்குக் கடவுள் அளித்த வரமாகக் கருதுகிறேன்,” என்றார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்