கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மோனோரயில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதால் மொத்தம் 373 பயணிகள் சிக்கித் தவிக்க நேரிட்டது.
வியாழக்கிழமை (நவம்பர் 20) காலை மாஜு சந்திப்புக்கு அருகே மேடான் துவாங்கு (Medan Tuanku) பாதையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. எல்லாப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
காலை 9.39 மணிக்கு அவசர உதவி கேட்டு தங்கள் செயல்பாட்டு நிலையத்துக்கு அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவின் செயல்பாட்டு படைப்பிரிவுத் தலைவர் முகம்மது ரெமி செ ஹட் தெரிவித்தார்.
“நிலைமை கட்டுக்குள் இருந்ததாகவும் நிர்வாகப் பிரிவினர், நின்றுபோன ரயிலிலிருந்து பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் மோனோரயிலை நடத்தும் நிறுவனம் தெரிவித்தது,” என்று அவர் வியாழக்கிழமையன்று அறிக்கையில் தெரிவித்தார்.
பயணிகளில் ஒருவரான 58 வயது மாது சம்பவத்தின்போது மயங்கி விழுந்ததாகவும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு கூடுதல் பரிசோதனைகளுக்காக அவர் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேடான் துவாங்கு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றைச் சரிசெய்யும் பணிகள் நிறைவடைந்ததாக ரேப்பிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் முன்னதாக அறிக்கையில் தெரிவித்தது. எல்லா மாற்று ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் ரயில் சேவைகள் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

