மித்ரா திட்டம்: 50,000 இந்தியர்கள் பயனடைய 65.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மித்ரா திட்டம்: 50,000 இந்தியர்கள் பயனடைய 65.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

2 mins read
23ccd533-9813-4157-8f93-e44c4ee1087c
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 4,000 குழந்தைகளுக்கு பாலர்க் கல்வி மானியமாக தலா 2,530 ரிங்கிட் வரை வழங்க 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. - படம்: தமிழ் மலர்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு (மித்ரா) இந்த ஆண்டு 65.5 மில்லியன் ரிங்கிட் செலவில் ஆறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் குறிப்பாக பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட வசதி குறைந்த மலேசிய இந்தியர்கள் பயனடைவர் என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

கல்வி, தொழில்முனைப்பு, சமூக மேம்பாடு, சுகாதாரம், சமூக உதவி ஆகிய துறைகளில் இந்த முதற்கட்டத் திட்டங்கள் கவனம் செலுத்தும். மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மித்ரா அமைப்புக்கு கூடுதலாக வழங்கிய 50 மில்லியன் ரிங்கிட் நிதியின் காரணமாகவே இந்த உதவிகளை அதிக மக்களுக்கு விரிவுபடுத்த முடிந்தது என்று வெள்ளிக்கிழமை (மே 29) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் ரமணன் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 4,000 குழந்தைகளுக்கு பாலர்க் கல்வி மானியமாக தலா 2,530 ரிங்கிட் வரை வழங்க 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வு எழுதும் 5,000 இந்திய மாணவர்களுக்கு இலவசத் துணைப்பாட வகுப்புகளை நடத்த 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 5 முதல் மித்ரா இணையத்தளத்தில் திறக்கப்படும்.

தொழில்முனைப்பை ஊக்குவிக்க 500 இந்தியத் தொழில்முனைவர்களுக்கு தலா 50,000 ரிங்கிட் வரையிலான தொழில் தொடக்க மானியங்கள் வழங்கப்படும். சுகாதாரம் சார்ந்த உதவியாக, நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 1,300 வசதி குறைந்த மலேசிய இந்தியர் நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்புச் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் 5,000 ரிங்கிட் வரை மானியம் வழங்க 6.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய நல வாரியத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் ‘துணை மதானி’ திட்டத்தின்கீழ், 10,000 பேருக்குப் பேரிடர் உதவி, மருத்துவச் சாதனங்கள் மற்றும் உடற்குறைபாடுகள் உடையோருக்கான உதவி போன்ற அவசரகால உதவிகள் தலா 5,000 ரிங்கிட் வரை வழங்கப்படும்.

இது தவிர, கிராமப்புற இந்தியர்களின் மேம்பாட்டிற்காக 38 மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்றச் சேவை மையங்களுக்கு தலா 150,000 ரிங்கிட் நிதி பகிர்ந்தளிக்கப்படும். இத்திட்டங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாகவும் வெளிப்படையான முறையிலும் செயல்படுத்தப்படுவதை மித்ரா பிரிவு தொடர்ந்து கண்காணிக்கும் என்று அமைச்சர் ரமணன் உறுதி அளித்துள்ளார். தகுதியுடைய பொதுமக்கள் www.mitra.gov.my என்ற இணையத்தளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஇந்தியர்நிதிஒதுக்கீடுவசதி குறைந்த