வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துசெல்ல முற்பட்ட மற்றொரு சரக்குக் கப்பல் தாக்கப்பட்டுள்ளதாக வென்கார்ட் எனும் கடல்துறை வேவு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அது, ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றபோது தாக்கப்பட்ட மூன்றாவது கப்பல்.
ஹோர்முஸ் நீரிணையிலிருந்து ஓமான் வளைகுடா நோக்கிச் சென்றுகொண்டிருந்த எம்எஸ்சி ஃபிரான்செஸ்கா என்ற பனாமா கொடியேந்திய கப்பல், ஈரானின் கரையிலிருந்து குறிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தாக்கப்பட்ட கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஈரானுடனான போர் நிறுத்த உடன்பாட்டைக் காலவரையறையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, புதன்கிழமை (ஏப்ரல் 22) அந்தக் கப்பல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதற்குமுன் ஏப்ரல் 22, காலை இரண்டாவது சரக்குக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதை பிபிசி வெரிஃபை செய்தி நிறுவனம் உறுதிசெய்தது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குச் சொந்தமான இயூஃபோரியா கப்பல் குறிவைக்கப்பட்டதாக நிறுவனம் சொன்னது.
ஈரானுக்கு மேற்கிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பிரிட்டன் கடல்துறை வர்த்தகச் செயல்பாட்டு நிலையமும் வென்கார்ட் நிறுவனமும் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
தாக்கப்பட்ட கப்பலுக்குச் சேதம் ஏற்படவில்லை. சிப்பந்திகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
இந்நிலையில், திடீர் தாக்குதல் நடத்தும் நோக்கில் போர் நிறுத்த உடன்பாட்டைத் திரு டிரம்ப் நீட்டித்தார் என்றும் ஈரானுக்கு அந்த முடிவு ஒரு பொருட்டல்ல என்றும் மூத்த ஈரானிய ஆலோசகர் ஒருவர் கூறினார்.
திரு டிரம்ப்பின் திடீர் தாக்குதல்களுக்கு ராணுவ ரீதியாகத்தான் பதிலடி கொடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திரு டிரம்ப், ஏப்ரல் 22ஆம் தேதி ஈரானுடனான சண்டைநிறுத்த உடன்பாட்டைக் காலவரையறையின்றி நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு காலாவதியாவதற்குச் சில மணிநேரம்முன் உடன்பாட்டை நீட்டிப்பதாக அவர் சொன்னார்.
உலகப் பொருளியலை உலுக்கியதுடன் பல்லாயிரம் பேரைப் பலிவாங்கிய மத்திய கிழக்குப் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையை அமெரிக்காவும் ஈரானும் தொடர, திரு டிரம்ப்பின் அறிவிப்பு வகைசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கலந்துரையாடல்களில் உதவிசெய்த பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஏற்ப சண்டைநிறுத்த உடன்பாட்டை நீட்டித்ததாகத் திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

