சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றின் நீதிபதி, 727 மில்லியன் டாலரை (933 மில்லியன் வெள்ளி) அந்த மாநிலத்திடம் செலுத்துமாறு மெட்டா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மெட்டா பொதுமக்களுக்குத் தொந்தரவு இழைத்ததாகவும் சிறாருக்கு ஆபத்து விளைவித்ததாகவும் நியூ மெக்சிகோ குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மெட்டா, அறிக்கை மூலம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
“எங்கள் தளங்களில் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். தவறாக நடந்துகொள்பவர்களின் கணக்குகளையும் அபாயம் விளைவிக்கக்கூடிய பதிவுகளையும் அடையாளம் கண்டு அகற்றுவதன் தொடர்பில் வெளிப்படையாகவும் இருக்கிறோம்,” என்று மெட்டா சொன்னது.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களின் உரிமையாளரான மெட்டாமீது நியூ மெக்சிகோ அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி ராவுல் டோரஸ், 2023ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். மெட்டா, இணைய அபாயங்களிலிருந்து சிறாரைப் பாதுகாக்கத் தவறியது என்பது அவரின் வாதம்.
இணையத்தில் சிறாருக்கு இருக்கக்கூடிய ஆபத்து தொடர்பில் நியூ மெக்சிகோவிடம் இழப்பீடாக 375 மில்லியன் டாலரை மெட்டா வழங்கவேண்டும் என்று முன்னதாக மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.


