கொத்துக்கொத்தாக ஆட்குறைப்பு: 1000க்கும் அதிகமானோரை வெளியேற்றும் ஆரக்கிள்

கொத்துக்கொத்தாக ஆட்குறைப்பு: 1000க்கும் அதிகமானோரை வெளியேற்றும் ஆரக்கிள்

1 mins read
74ca4632-4fd4-4675-8e4c-cb031fe4619c
ஆரக்கிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்கிறது. - கோப்புப் படம்: கீக் வயர்

பெங்களூரு: முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்கிறது.

இத்தகவலை இவ்விவகாரம் குறித்து அறிந்த இருவர் உறுதிப்படுத்தியதாக ‘சிஎன்பிசி’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தி செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) வெளியானது. அதன் பிறகு, ஆரக்கிள் நிறுவனம், ஊழியர் சீரமைப்பு மற்றும் மறுபயிற்சி அறிவிப்புச் சட்டத்தின்கீழ் (‘வார்ன்’) தாக்கல் செய்த ஓர் அறிவிப்பின்படி, வாஷிங்டன் மாநிலத்தில் அலுவலகம் வராமல் பணிபுரியும் 491 ஊழியர்களையும் சியாட்டலில் உள்ள அதன் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களையும் ஜூன் 1 முதல் ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகத் தெரிவித்தது.

‘‘ஊழியர் எண்ணிகையில் குறைப்பு மற்றும் பிற பணிநீக்கங்களின் ஒரு பகுதியாக ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றனர். நிறுவனத்தின் சியாட்டில் கிளைகள் தொடர்ந்து செயல்படும்,” என்று ஆரக்கிள் கூறியது.

‘வார்ன்’ சட்டத்தின்படி, ஆட்குறைப்பு செய்வதற்குக் குறைந்தது 60 நாள்களுக்கு முன்னதாக முதலாளிகள் ஊழியர்களுக்கு அறிவிப்பு வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, அனைத்துலக அளவில் இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 162,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர்.

செயற்கை நுண்ணறிவு ஆற்றலில் கவனம் செலுத்துவதற்கும் நிதி வளத்தைச் சேமிப்பதற்கும் இந்த நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளதாகவும் ஆரக்கிள் கூறியது.

வருங்காலங்களில் ஆரக்கிள் ‘ஏஐ’ திட்டங்களுக்காக 50 பில்லியன் டாலர்வரை செலவழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஊடகத்தில் வெளியான செய்தி குறித்து கருத்துத் தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்