பியூனஸ் அய்ரஸ்: மறைந்த காற்பந்து நட்சத்திரம் டியேகோ மரடோனாவுக்கு உறழ்மனநிலை (bipolar disorder) பாதிப்புக்கு ஆளாகும் தன்மை இருந்ததாக அர்ஜென்டினா நீதிமன்றம் ஒன்றில் மனநல ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் மரடோனா, தற்பூசனை (narcissism) எனப்படும் தன்னைப் பற்றி அளவுக்கதிகமாகப் பெருமையாக நினைத்துக்கொள்ளும் தன்மை உடையவர் என்றும் அந்த மனநல ஆலோசகர் கூறியுள்ளார். அதோடு, அவர் மதுபானங்களை அறவே தொடாத நிலையில் இருந்ததாகவும் அவர் சொன்னார்.
உள்ளூர் ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டன.
கார்லோஸ் டியாஸ் எனும் அந்த மனநல ஆலோசகர், கவனமின்றி நடந்துகொண்டு மரடோனாவுக்குத் தவறான மருந்தைப் பரிந்துரைத்து நோக்கமில்லா மரணம் விளைவித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். காற்பந்து நட்சத்திரமும் முன்னாள் அர்ஜென்டினா பயிற்றுப்பாளராகவும் இருந்த மரடோனாவுக்கு மரணம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எழுவரில் 34 வயது டியாசும் ஒருவர்.
“அவருக்கு உறழ்மனநிலையும் தற்பூசனையும் இருந்தன,” என்று டியாஸ் கூறியதாக எல் கிளாரின் செய்தித்தாள் தெரிவித்தது.
“அவரால் ஒரு தேசத்தையே காலடியில் கொண்டுவர முடியும். அதேவேளை, ஒரு கோப்பை மதுபானம் அவரை சீர்குலைக்கக்கூடும்,” என்றும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு மாண்ட மரடோனா, 1986ஆம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத் தந்தவர்.

