ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் இருவரில் ஒருவரும் இறந்தவர்களில் அடங்குவார். துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சொல்லப்படும் இரண்டாமவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இருவரும் முன்னதாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
துப்பாக்கிச்சூட்டை ஒரு ‘பயங்கரவாதச் சம்பவம்’ என்று குறிப்பிட்ட காவல்துறை, இதற்குப் பின்னால் மூன்றாவது நபர் உள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துவதாகச் சொன்னது.
இச்சம்பவத்தில் மேலும் 29 பேர் காயமுற்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் என நியூ சவுத் வேல்ஸ் தெரிவித்தது.
காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
காயமடைந்தவர்கள் சிட்னியின் வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் நியூ சவுத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவை கூறியது.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியும் மனவேதனையும் அளிப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் கூறியுள்ளார்.
கடற்கரையில் நடைபெற்ற யூதர்களின் திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தபோது உள்ளூர் நேரம் மாலை 6.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் பிற்பகல் 3.30 மணி) துப்பாக்கிக்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தித்தளம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள் தரையில் விழுந்துகிடந்ததைக் காட்டும் காணொளிகளை ஸ்கை, ஏபிசி ஆகிய தொலைக்காட்சிகள் காட்டின.
இந்தச் சம்பவம் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் சொன்னார்.
“கடந்த ஈராண்டுகளில் ஆஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வின் வெளிப்பாடே இது,” என்றார் அவர்.
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய முஸ்லிம் குழுக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, சிட்னி அருகே உள்ள போண்டாய் கடற்கரை வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூரர்கள் அதிகாரத் தரப்பிலிருந்து வெளியிடப்படும் செய்திகளைக் கவனிக்குமாறும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்குமாறும் கேன்பராவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் கூறியுள்ளது.

