பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகே கார் சன்னல்களை உடைத்துத் திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனால், அத்தகைய ஆறு சம்பவங்கள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன.
சந்தேக நபர் சனிக்கிழமை (பிப்ரவரி 21) இரவு 8.30 மணியளவில் தாமான்சாராபகுதியில் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை துணை ஆணையர் பாஸ்ரி சகோனி கூறினார். 31 வயது மாது ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) பிற்பகல் சுமார் ஒரு மணிக்குப் புகாரளித்ததைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“கீப்போங்கில் ஜாலான் ரிம்புனான் ராயா பகுதிக்கு அருகே கீப்போங் பாரு எம்ஆர்டி நிலைய வாகன நிறுத்துமிடத்தில் ஒருவர், நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் சன்னலை உடைத்ததாக பாதிக்கப்பட்டவரான அலுவலகப் பணியாளர் தெரிவித்தார்,” என்று பாஸ்ரி சகோனி குறிப்பிட்டார். சந்தேக நபர் ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பான குற்றம் உள்ளிட்டவற்றைப் புரிந்திருந்தது சோதனைகளில் தெரிய வந்தது.
பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான கைப்பேசி, கைக்கடிகாரம், மின்னூட்டும் கருவி உள்ளிட்ட பொருள்களையும் காவல்துறையினர் மீட்டனர்.

