மலேசியாவில் விலை அதிகரிப்பைச் சமாளிக்க சொந்தமாகக் காய்கறி விளாவிக்க அறிவுரை

மலேசியாவில் விலை அதிகரிப்பைச் சமாளிக்க சொந்தமாகக் காய்கறி விளாவிக்க அறிவுரை

2 mins read
87a31316-49ce-4e83-8627-1cc8a555faf9
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இயற்கை விவசாயப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் என்வி சுப்பாராவ். - கோப்புப் படம்: சிர்ர் ஹரியான்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: உணவு விலை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க சொந்தமாகக் காய்கறிகளை விளைவிக்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (சிஏபி), மலேசியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

கடந்த சில நாள்களில் காய்கறி விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடத்தக்க அளவில் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் சிஏபி சங்கத்தின் இயற்கை விவசாயப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் என்வி சுப்பாராவ் விவரித்தார்.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் பூசல் தொடர்வதால் குறுகிய காலத்தில் காய்கறி விலை 50 விழுக்காடு வரை உயரக்கூடும் என்று கேமரன் மலை விளைவிப்பாளர் சங்கம் (Cameron Highlands Growers Association) எச்சரிக்கை விடுத்ததை திரு சுப்பாராவ் சுட்டினார்.

விலை அந்த அளவு அதிகரித்த பிறகே தற்போதிருப்பதைவிட சற்று குறையும் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அறிக்கை மூலம் தெரிவித்தார். ஏற்கெனவே உரம், போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்திருப்பது விவசாயிகளுக்குப் பெருஞ்சுமையாக உருவெடுத்திருப்பதாக திரு சுப்பாராவ் குறிப்பிட்டார்.

ஊழியர்களைக் கவனித்துக்கொள்வதற்கான செலவும் அதிகரித்து வருகிறது. விவசாய ஊழியர்களில் பலர் வெளிநாட்டவர். பெரும்பாலான ஊழியர்கள் அதிக சம்பளம் தருமாறு குரல் எழுப்புகின்றனர்.

சவால்களைச் சமாளிக்க நகர்ப்புறத் தோட்ட வேலையில் ஈடுபட்டு வீட்டிலேயே காய்கறிகளை விளைவித்துக்கொள்ளுமாறு திரு சுப்பாராவ் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, மத்திய கிழக்குப் பூசல் தொடரும் வேளையில் மக்களுக்குப் போதுமான உணவு இருப்பதை உறுதிசெய்ய நாட்டின் உணவு கட்டமைப்பை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று மலேசிய வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகம்மது சாபு கூறியுள்ளார். மத்திய கிழக்குப் பூசல், வெளிநாடுகள் மட்டும் சம்பந்தப்பட்டுள்ள பிரச்சினையல்ல, அது உலக உணவு விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும் ஒன்று என அவர் சுட்டினார்.

வீட்டில் சிறிய இடம் இருந்தால்கூட அதற்கு ஏற்றவாறு சில காய்கறி வகைகளை விளைவிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்காய்கறிவிலைமலேசியாமத்திய கிழக்கு