ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க மலேசியக் கப்பலுக்கு அனுமதி எனத் தகவல்

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க மலேசியக் கப்பலுக்கு அனுமதி எனத் தகவல்

2 mins read
8f73c998-b4f7-47e0-8515-7e6ceca9be18
சரக்குக் கப்பலுக்கு அனுமதி கிடைத்திருப்பது தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: ஹோர்முஸ் நீரிணையில் இதற்கு முன்னர் தேங்கிக் கிடந்த ஏழு மலேசிய வர்த்தகக் கப்பல்களில் ஒன்று நீரிணையைப் பத்திரமாகக் கடந்துசெல்ல அனுமதி வழங்கப்பட்டு, அக்கப்பல் தனது இறுதி இலக்கை நோக்கி வந்துகொண்டிருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) காலை அமைச்சு ஓர் அறிக்கையை வெளியிட்டது.

“தடையற்ற கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பான கடல்துறைப் பயணம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை அனைத்துலகச் சட்டத்திற்கு இணங்கக் கடைப்பிடிக்க மலேசியா தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது.

“வட்டாரச் சவால்கள்மீது கவனம் செலுத்தவும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணவும் அரசதந்திர முயற்சி, பேச்சுவார்த்தை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மலேசியா மீண்டும் வலியுறுத்துகிறது,” என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, முதல் மலேசியக் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டதாக மலேசியாவிலுள்ள ஈரான் தூதரகம் திங்கட்கிழமை தெரிவித்தது.

“ஈரான் இஸ்லாமியக் குடியரசு தனது தோழர்களை மறக்காது என்று ஏற்கெனவே கூறியுள்ளோம்,” என்று அந்தத் தூதரகம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

பிற நாட்டுக் கப்பல்களுக்கு விதிக்கப்படும் சிறப்புப் பயணக் கட்டணங்களில் இருந்தும் மலேசியக் கப்பல்களுக்கு ஈரான் விலக்கு அளித்துள்ளது.

மலேசியப் பிரதமர் அன்வாரி இப்ராகிம், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இந்த அனுமதி கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டது. அந்த உயர்மட்ட அரசந்திர உரையாடல் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், எஞ்சிய ஆறு கப்பல்களும் கட்டம் கட்டமாக அனுமதியைப் பெற்று பயணத்தைத் தொடங்கும் என்று மலேசியாவுக்கான ஈரானியத் தூதர் வலியுல்லா முகம்மதி நஸ்ரபாடி தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோலாலம்பூர்-அங்காரா கலந்துரையாடலில் பங்கேற்க வந்த அவர், பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் பேசினார்.

“ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க மலேசியக் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்கப்படும்,” என்று அப்போது அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்