மலேசிய அரசாங்க ஊழியர்கள் ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து வேலை செய்வர்

மலேசிய அரசாங்க ஊழியர்கள் ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து வேலை செய்வர்

2 mins read
f413b88a-2bbf-4716-a190-3fac86d399c2
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை ஈடுசெய்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பொதுத் துறை அலுவலகங்கள் மற்றும் அரசாங்கத் தொடர்புள்ள நிறுவனங்களின் பணியாளர்கள் ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து வேலை செய்வர் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை ஈடுசெய்யும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.

மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவின் எரிசக்திப் பாதுகாப்பைக் கட்டிக்காக்கவும் திடீர் விலை ஏற்றத்திலிருந்து பொதுமக்களைக் காக்கவும் விரிவான உத்தி வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய திரு அன்வார், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடு அதன் ஒருபகுதியே என்றார்.

மோதலின் தாக்கம் மலேசியக் குடும்பங்களையும் வர்த்தகங்களையும் பாதிக்கும் வரை காத்திராமல், மக்கள் ஆதரவு முன்னெடுப்பு மூலம் அரசாங்கம் முன்கூட்டியே செயல்படுவதாக அவர் சொன்னார்.

உலக நிலவரம் இன்னும் மோசமடையக்கூடும் என்று தெரிவித்த திரு அன்வார், பழைய நிலைக்குத் திரும்ப வெகுகாலம் பிடிக்கும் என்றார்.

அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் ஆதரவு நடவடிக்கைகளில் மாதந்தோறும் 200 லிட்டர் எரிபொருள் ஒதுக்கீடும் ஒன்று. அதேபோல, சாபா, சரவாக் மற்றும் லெபுவான் மாநிலங்களில் சலுகை விலை டீசல் திட்டமும் முழுமையாக நடப்புக்கு வந்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரிக்கும் உலக எண்ணெய் விலைகளின் தாக்கத்தைச் சமாளிக்கும் நோக்கம் கொண்டவை என்றார் பிரதமர் அன்வார்.

உலகளாவிய எண்ணெய் விலை ஏற்றத்தைச் சமாளிக்க மலேசிய அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 4 பில்லியன் ரிங்கிட் (S$1.28 பில்லியன்) செலவிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைக் குறிப்பிட்ட திரு அன்வார், “இது ஒரு சுலபமான செயலன்று. நமது அரசாங்கத்தின் சலுகைகள் ஒரு வரம்பிற்கு உட்பட்டவை. இதில் மற்ற நாடுகளின் அனுபவங்களையும் நாம் கவனிக்க வேண்டும்,” என்றார் அவர்.

மலேசியாவின் எரிசக்தி வளங்களை அரசாங்கம் பன்முகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் திரு அன்வார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்