திவெட் பயிற்சியின் மூலம் இளையர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகள்

திவெட் பயிற்சியின் மூலம் இளையர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகள்

2 mins read
16aeb9a0-3bce-4359-a4eb-156b714c9309
மேலும் 500 மாணவர்களைக் கொண்டு MCYTT 2.0 திட்டம் தொடர்வதாக, மித்ராவின் தலைமை இயக்குநர் பிரபாகரன் கணபதி (நடுவில்) கூறினார். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

செராஸ்: மலேசிய-சீன நாடுகளின் இளையர்களிடையே ‘திவெட்’ எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தொடர் முயற்சியாக, ‘பெலியா மஹிர்’ எனும் அரசு சாரா அமைப்பின் ஏற்பாட்டில் இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் ஆதரவோடு மீண்டும் தொடர்கின்றது மலேசியா-சீனா இளையர் திவெட் பயிற்சித் திட்டம் 2.0 (MCYTT 2.0).

அரசாங்கம் வழங்கிய 29 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 500 மாணவர்களை உட்படுத்தி, கடந்தாண்டு MCYTT 1.0 திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.

அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் அதே நிதி ஒதுக்கீட்டில் மேலும் 500 மாணவர்களைக் கொண்டு MCYTT 2.0 திட்டம் தொடர்வதாக, மித்ராவின் தலைமை இயக்குநர் பிரபாகரன் கணபதி கூறினார்.

இந்திய இளையர்கள், குறிப்பாக பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த இளையர்கள் அனைத்துலகத் தொழில்துறை பயிற்சியில் பங்கேற்கவும், உலகளாவிய திறன் அங்கீகாரத்தைப் பெறவும் இத்திட்டம் வாய்ப்பளிப்பதாக திரு பிரபாகரன் தெரிவித்தார்.

‘’கடந்தாண்டு இத்திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்தவர்கள். முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றனர். திவெட் பயிற்சியைத் தவிர்த்து நல்ல ஒரு அனுபவம் அவர்களுக்குக் கிடைத்தது. மேலும், பங்கேற்ற 500 மாணவர்களில் சுமார் 50 மாணவர்களுக்கு ‘பெலியா மஹிர்’ வேலை வாய்ப்பையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றது,’’ என்றார் அவர்.

இப்பயிற்சி திட்டத்திற்கான சான்றிதழ் சீன அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படுவதால், அது இளையர்களின் கல்வித் தகுதியை உயர்த்தி, வேலை வாய்ப்பைப் பெறுவதை எளிதாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, 12 வகையான திறன் கல்வியை உட்படுத்தி இரண்டு வாரங்கள் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும் நிலையில், அது அவர்களுக்கு ஏற்படுத்தும் நீண்டகால நன்மைகள் குறித்து, ‘பெலியா மஹிர்’ தலைவர் முஹமது ரிசான் ஹசான் விளக்கினார்.

‘’அரசாங்கத்தின் உயர் வளர்ச்சி, உயர் மதிப்பு போன்ற விருப்பங்களை நாம் பார்த்தால். சீனாவில் ஏற்பாடு செய்திருக்கும் பயிற்சிகள் உண்மையில் 2030ஆம் ஆண்டு புதிய தொழில்துறையுடன் ஒத்துப்போகின்றது. தற்போது இருப்பதை விட மாத ஊதியத்தை அதிகரிப்பதே அதன் நோக்கமாகும்,’’ என்று திரு முஹமது ரிசான் விவரித்தார் என்று பெர்னாமா செய்தி கூறியது.

குறிப்புச் சொற்கள்