மலேசியா: சட்டவிரோத மருந்தகங்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க அழைப்பு

மலேசியா: சட்டவிரோத மருந்தகங்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க அழைப்பு

2 mins read
fb86139d-31e0-40f9-a183-b75b6dbfaff2
வெளிநாட்டவர்கள் மருத்துவர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. - மாதிரிப்படம்: அன்ஸ்ப்ளேஷ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத மருந்தகங்கள் குறித்து மலேசிய மருத்துவச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் மருத்துவர்களாக ஆள்மாறாட்டம் செய்து, முறையான தகுதிச்சான்று அல்லது பதிவுகள் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

அது, நோயாளிப் பாதுகாப்பு, ஒழுங்குமுறையில் கவனக்குறைவு ஆகியவற்றின் தொடர்பில் முக்கியக் கவலைகளை எழுப்புவதாகச் சங்கத்தின் தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு ராஜூ கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

“தவறாக நோயைக் கண்டறிதல், முறையற்ற சிகிச்சை, பாதுகாப்பற்ற சிகிச்சை முறைகளிலிருந்து எழக்கூடிய சிக்கல்கள், முறையாக வழங்கப்படாத அல்லது போலியான மருந்துகள் போன்றவற்றின் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படலாம்.

“மலேசியாவில் மருத்துவத் தொழில் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கடுமையான சட்டவிதிகளைக் கொண்டுள்ளது.

“செல்லுபடியான வருடாந்தரச் சான்றிதழை வைத்துள்ள மலேசிய மருத்துவச் சங்கத்தில் பதிவான மருத்துவர்கள் மட்டுமே சட்டபூர்வமாக மருத்துவர்களாகப் பணியாற்றமுடியும்,” என்று டாக்டர் திருநாவுக்கரசு வியாழக்கிழமை (பிப்ரவரி 19) வெளியான அறிக்கையில் தெரிவித்தார்.

சட்டவிரோதச் சுகாதாரப் பராமரிப்புச் செயல்பாடுகளை நிறுத்த, கண்காணிப்பு, அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். முன்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அத்தகைய சட்டவிரோத மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படுவது, அமலாக்க நடவடிக்கைகளில் உள்ள இடைவெளியைக் காட்டுவதாக அவர் கூறினார்.

அமலாக்க நடவடிக்கைகள் உத்திபூர்வ முறையில் குறிப்பாக, வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வலுப்படுத்தப்படவேண்டும் என்றார் டாக்டர் திருநாவுக்கரசு. எளிதில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் குறிவைக்கப்படுவதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி அவர் அறிவுறுத்தினார். முறையாகப் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களிடமும் உரிமம் பெற்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களிலும் மட்டுமே சிகிச்சை நாடும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்