காணாமற்போன எம்எச்370 விமானத்தைத் தேடும் புதிய முயற்சிக்கு மலேசியா ஒப்புதல்

காணாமற்போன எம்எச்370 விமானத்தைத் தேடும் புதிய முயற்சிக்கு மலேசியா ஒப்புதல்

2 mins read
ace5d621-66b7-4786-9340-0f8100b888d2
 எம்எச்370 விமானம் காணாமற்போன 10வது ஆண்டு நினைவின் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: பத்தாண்டுகளுக்கு முன்னர் வான்வெளியில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச்370 (MH370) விமானத்தைத் தேடும் புதிய முயற்சிக்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கடலோர வட்டாரத்தில் 15,000 சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு ஆழ்கடலில் தேடும் பணியை மீண்டும் தொடர அரசாங்கம் திட்டமிட்டு உள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்து உள்ளார்.

மேலும், அந்தத் தேடுதல் பணிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஓஷன் இன்ஃபினிட்டி’ (Ocean Infinity) என்னும் கடல்துறை ஆய்வு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

எம்எச்370 விமானத்தை மீண்டும் தேடுவதற்கான அந்த முயற்சிக்கு மலேசிய அமைச்சரவை கடந்த வாரம் (டிசம்பர் 13) கொள்கை அளவில் ஒப்புதல் அளித்ததாக திரு லோக் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் குத்தகை தொடர்பான நிபந்தனைகள் குறித்து போக்குவரத்து அமைச்சு பேச்சு நடத்தி வருகிறது என்றும் 2025ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியில் அது இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“கண்டுபிடிப்பு இல்லை எனில், கட்டணம் இல்லை,” என்னும் கொள்கையின் அடிப்படையில் உத்தேச நிபந்தனை பேசப்படுவதாகவும் தெரிகிறது.

அதாவது, தேடுதல் பணியில் விமானத்தின் சிதைவுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனில் தேடுதல் நிறுவனத்திற்கு மலேசிய அரசாங்கம் கட்டணம் எதுவும் தராது.

ஆக அண்மைய இந்த முயற்சி, எம்எச்370 விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு இருக்கும் கடப்பாட்டை வெளிப்படுத்துவதாக திரு லோக் கூறினார்.

2014 மார்ச் 8ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகரை நோக்கி மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச்370 விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டது.

அப்போது 12 விமானப் பணியாளர்களும் 227 பயணிகளும் அந்த போயிங் 777 விமானத்தில் இருந்தனர்.

இந்தியப் பெருங்கடலின் தென்பகுதி வானில் பறந்துகொண்டிருந்த வேளையில் அந்த விமானம் திடீரென்று மறைந்துவிட்டது. அதன் கதி என்னவென்று இன்றுவரை தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவிமானம்மீட்பு