மதுக்கடையில் புகுந்து ஊழியரைத் தாக்கிய சிறுத்தை

மதுக்கடையில் புகுந்து ஊழியரைத் தாக்கிய சிறுத்தை

1 mins read
5f89a981-e3fc-4cba-acf5-b3b3d319c756
மதுக்கடையின் பாதுகாப்புக் கேமராக்களில் சிறுத்தை ஊழியரைத் தாக்குவது பதிவாகியுள்ளது. - படம்: ஃபேஸ்புக்/ஜெசி ஹொல்குவின்
Google News Preferred Icon

ராஜஸ்தான்: இந்திய மாநிலமான ராஜஸ்தானின் டொங்க் மாவட்டத்திலுள்ள டொடா ராய்சிங் பகுதியில் திடீரெனத் தோன்றிய ஒரு சிறுத்தை அங்குள்ள மூவரைக் காயப்படுத்தியது.

திங்கட்கிழமை (ஜூலை 20) நடந்த சம்பவத்தில் அவ்வட்டாரத்தில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கச் சென்றிருந்த தொண்டூழியரை அது முதலில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.

தப்பிய சிறுத்தை அருகில் இருந்த மதுக்கடை ஒன்றினுள் புகுந்து அங்கிருந்த இரு ஊழியர்களையும் தாக்கிக் காயப்படுத்தியது.

காயமடைந்தாலும் அந்த ஊழியர்களில் ஒருவர் கடையின் இழுவைக் கதவை அடைத்துவிட்டதால், சிறுத்தை வெளியில் வரமுடியாமல் மதுக்கடையின் உள்ளேயே சிக்கிக்கொண்டது.

வனத்துறை அதிகாரிகள் மதியம் 2 மணியளவில் அங்கு வந்து, மயக்க ஊசியை அதன்மீது செலுத்தி பிறகு அதனை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். விரைவில் அச்சிறுத்தை மீண்டும் காட்டுக்குள் விடப்படும்.

இந்திய ஊடகங்களின் தகவலின்படி, சில நாள்களாகவே சிறுத்தையின் நடமாட்டம் குறித்து அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது. ஊர் எல்லைப் பகுதியிலும் அங்குள்ள கோயில்களிலும் அதனை சிலர் பார்த்துள்ளனர்.

மது அருந்தவே சிறுத்தை மதுக்கடைக்குள் புகுந்ததாக சிலர் வேடிக்கையாகக் கருத்துரைத்தனர். நல்ல வேளையாக சிறுத்தை சீண்டிய மூவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் தொண்டூழியர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டார். மதுக்கடை ஊழியர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுத்தைகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் அத்துமீறி குடியேறுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக இயற்கை ஆர்வலர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்