பிற மொழிகளைக் கற்பதால் மலாய் மொழிக்குப் பாதிப்பில்லை: அன்வார்

பிற மொழிகளைக் கற்பதால் மலாய் மொழிக்குப் பாதிப்பில்லை: அன்வார்

1 mins read
fdc55522-beae-413a-9f7e-0dde368960e8
அனைத்துலக அளவில் மலேசியா சிறந்து விளங்க, ஆங்கில மொழித் திறனை வலுப்படுத்துவதும் அவசியம் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் (நடுவில்) கூறினார். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் பிற மொழிகளைக் கற்றுத் தேர்வது, தேசிய மொழியான மலாய் மொழியின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் செயலாகக் கருதப்படக்கூடாது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“அனைத்து மாணவர்களும் மலாய் மொழியைக் கற்றுத் தேறுவதை உறுதிசெய்வதே தமது அரசாங்கத்தின் முன்னுரிமை ஆகும். அதேவேளையில், மக்கள் பிற மொழிகளைக் கற்பதிலும் திறந்த மனத்துடனும் ஈடுபாட்டுடனும் இருக்கவேண்டும்,” என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

அனைத்துலக அளவில் மலேசியா சிறந்து விளங்க, ஆங்கில மொழித் திறனை வலுப்படுத்துவதும் அவசியம் என்று அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நடந்த கல்வி அமைச்சின் மாதாந்தரக் கூட்டத்தில் உரையாற்றியபோது அக்கருத்துகளைப் பிரதமர் அன்வார் பகிர்ந்துகொண்டார்.

“மாணவர்கள் சீனம், தமிழ், பிரெஞ்சு அல்லது ரஷ்யன் போன்ற பிற மொழிகளைக் கற்றுத் தேற நாம் ஏன் வாய்ப்பளிக்கக் கூடாது? இதற்காக நான் மலாய் மொழியைக் குறைத்து மதிப்பிடுவதாகப் பொருள் அல்ல. மலாய் மொழியை மேம்படுத்துவதற்காகவே எனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளேன்,” என்றார் திரு அன்வார்.

அனைத்துலகப் பள்ளிகளில் மலாய் மொழி, மலாய் வரலாற்றுப் பாடங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்குத் தமது அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅன்வார் இப்ராகிம்கல்விமலாய் மொழி