ர‌ஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தரைவழி பாலம் விரைவில் செயல்படும்

ர‌ஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தரைவழி பாலம் விரைவில் செயல்படும்

2 mins read
8bcba640-42a0-48cc-9ae4-7e7f2dc198cc
ர‌ஷ்யாவையும் வடகொரியாவையும் இணைக்கும் தரைவழி பாலம் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியாவையும் ர‌ஷ்யாவையும் இணைக்கும் தரைவழி பாலத்தைக் கூடிய விரைவில் திறக்க இருநாடுகளும் முனைப்புடன் செயல்படுவதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

தூமென் ஆற்று வழியாக அந்த நேரடி தரைவழி பாலம் அமைக்கப்படும். பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் ஓராண்டுக்குமுன் தொடங்கின.

சுற்றுலா, வர்த்தகம், மக்கள் நடமாட்டம் ஆகியவற்றுக்கு அந்தப் பாலம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று கேசிஎன்ஏ சொன்னது.

ர‌ஷ்யாவின் நெடுஞ்சாலையுடன் இணையும் 850 மீட்டர் பாலத்தை உருவாக்க 2024ஆம் ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வடகொரியாவுக்கு அப்போது அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.

இதற்கிடையே, பால இணைப்பை அனுசரிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) ர‌ஷ்யாவும் வடகொரியாவும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக மாஸ்கோ டைம்ஸ் சொன்னது.

தற்போதுள்ள ரயில் பாலத்திற்கு அருகில் கட்டப்படும் புதிய தரைவழி பாலம்

புதிய தரைவழி பாலம் தற்போதுள்ள ‘நட்பு பாலம்’ என்று அழைக்கப்படும் ரயில் பாலத்துக்கு அருகே கட்டப்படுகிறது. அந்த ரயில் பாலம், கொரியப் போருக்குப் பிறகு 1959ஆம் ஆண்டில் கட்டப்படும்படி உத்தரவிடப்பட்டது.

வடகொரியாவையும் ர‌ஷ்யாவையும் இணைக்கும் புதிய தரைவழி பாலத்தின் திறப்பு விழா கூடிய விரைவில் நடைபெறும் என்று கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் நடைபெறும் தேதி பற்றி அது குறிப்பிடவில்லை.

எனினும், பியோங்யாங்கில் உள்ள ர‌ஷ்யத் தூதரகம் தரைவழி பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஜூன் 19ஆம் தேதி நிறைவடையும் என்று டெலிகிராமில் பதிவிட்டது.

தரைவழி பாலம் வடகொரியாவுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று ர‌ஷ்யாவின் பிரிமோர்ஸ்கி வட்டார ஆளுநர் ஓலெக் கொசெமியாக்கோ கூறினார். அந்தப் பாலம், கலாசார, சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தும் என்றார் அவர்.

ர‌ஷ்யாவின் எல்லையில் உள்ள விளாடிவொஸ்டொக்கிற்கும் வடகொரியாவின் எல்லையில் உள்ள ராசோன் நகருக்கும் இடையிலான பயணத் தூரத்தைப் புதிய பாலம் 320கிலோமீட்டருக்குக் குறைக்கும் என்றார் திரு ஓலெக்.

அந்தத் தரைவழி பாலம் மூலம் ஒவ்வொரு நாளும் 300 கார்கள்வரை பயணம் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ர‌ஷ்யப் போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட படம்.
ர‌ஷ்யப் போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட படம். - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்