மலேசியாவில் கடத்தப்பட்ட சிறுமியைப் பாலியல் கும்பலிடம் விற்க முயற்சி

மலேசியாவில் கடத்தப்பட்ட சிறுமியைப் பாலியல் கும்பலிடம் விற்க முயற்சி

1 mins read
94f169c0-813f-4567-a2ff-ad355658dcaa
சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படுவோரை அக்டோபர் 12ஆம் தேதியன்று சிலாங்கூர் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர். அதே நாளன்று அச்சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். - படம்: இணையம்
Google News Preferred Icon

ஷா அலாம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் நகரில் 12 வயது சிறுமியைக் கடத்திய ஆறு சந்தேக நபர்கள், அவரைப் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்க முயன்றதாக மலேசியக் காவல்துறை தெரிவித்தது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சாவ் கிட் பகுதியில் செயல்படும் பாலியல் கும்பலிடம் அச்சிறுமியை விற்க அந்தக் கடத்தல் கும்பலின் தலைவர் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சிறுமியைக் காணவில்லை என்ற தகவலைப் பொதுமக்களிடம் காவல்துறை வெளியிட்டதை அடுத்து, அச்சிறுமியை ஏற்க அந்தப் பாலியல் கும்பல் மறுத்துவிட்டது.

அச்சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படுவோரிடம் அக்கும்பல் அவரைத் திருப்பி ஒப்படைத்தது.

இந்நிலையில், சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படுவோரை அக்டோபர் 12ஆம் தேதியன்று சிலாங்கூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர்.

அதே நாளன்று அச்சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

மேலும் இரண்டு சந்தேக நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமக்கு விநியோகிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்களைப் பெறுவதற்காகத் தமது அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்துக்குச் சென்றபோது அந்தச் சிறுகி கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் அக்டோபர் 8ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

வாகனத்தில் இருந்த ஒரு பெண்ணை அச்சிறுமிக்கு ஏற்கெனவே தெரியும் என்றும் அவரைப் பார்த்த பிறகு அந்த காரில் அவர் ஏறிக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

சந்தேக நபர்களின் விசாரணைக் காவல் நீட்டிக்கப்படக்கூடும் என்று அக்டோபர் 17ஆம் தேதியன்று சிலாங்கூர் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகாவல்துறைசிறுமிகடத்தல்