அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராகும் கெவின் வார்ஷ்

அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராகும் கெவின் வார்ஷ்

2 mins read
f0343b16-a87b-439a-885b-06be8d899c65
கெவின் வார்ஷ், மத்திய வங்கியின் ஆளுநராக இருந்துள்ளார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக கெவின் வார்ஷை நியமிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

தற்போதைய தலைவர் ஜெரோம் பாவலின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது.

இந்நிலையில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கெவின் வார்ஷை டிரம்ப் தேர்ந்தெடுள்ளார்.

“கெவினை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். மத்திய வங்கியின் சிறந்த தலைவராக அவர் இருப்பார். ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்,” என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வட்டி விகிதத்தை மத்திய வங்கி குறைக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஜெரோம் பாவல் அதற்கு அடிபணிய மறுத்துவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஜெரோம் பாவலை அதிபர் டிரம்ப் பலமுறை சாடியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே சர்ச்சை நீடிக்கிறது.

இதற்கிடையே அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக கெவின் வார்ஷை நியமிக்கவிருக்கும் அறிவிப்பு உலகப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.

உலகளாவிய பங்குகள் ஏற்றம் கண்டன. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து தங்கத்தின் விலை சரிந்தது.

ஆனால் கெவின் வார்ஷ் நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதல் தேவை.

புதிய தலைவராகவிருக்கும் கெவின் வார்ஷ் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகிறார்.

பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தைத் தக்கவைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் பொருளாதார மந்தநிலையைத் தவிர்க்க வட்டியைக் குறைக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வற்புறுத்துகின்றனர். இவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை எட்டுவது கெவின் வார்ஷுக்கு சவாலாக இருக்கும்.

அமெரிக்க மத்திய வங்கி, நாட்டின் நிதி நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் விலைவாசி உயராமல் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அது மட்டுமல்லாமல் உலக நிதிச் சந்தைகளை நிலைப்படுத்தும் சக்தியாக அமெரிக்க மத்திய வங்கி நீண்டகாலமாகக் காணப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்