சிங்கப்பூர்- ஜோகூர் டாக்சிகளின் இருப்பிடத்தைக் கண்காணிக்க கருவி

சிங்கப்பூர்- ஜோகூர் டாக்சிகளின் இருப்பிடத்தைக் கண்காணிக்க கருவி

2 mins read
b1519dcd-36ad-4ec5-85c4-46240915514a
ஜோகூர் செல்லும் டாக்சிகளுக்கான பான் சான் ஸ்திரீட் டாக்சி நிறுத்தம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இஸ்கந்தர் புத்திரி: சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் செல்லும் எல்லை தாண்டிய டாக்சிகளின் (Cross-border taxis) இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கருவி பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

பயணிகளை ஏற்றிச் செல்லும் முறையை முறைப்படுத்தவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அவர்கள் இறக்கி விடப்படுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஜோகூர் மாநில பொதுப்பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு குழுத் தலைவர் முகமது ஃபஸ்லி முகமது சாலே இதனைத் தெரிவித்தார்.

மலேசிய டாக்கிகள் சிங்கப்பூருக்குள் நுழையும்போது ‘இஆர்பி2’ எனும் மேம்படுத்தப்பட்ட மின்னிலக்க சாலைக் கட்டணத்துக்கான கருவியைப் பொருத்த வேண்டும் என்ற சிங்கப்பூரின் விதிமுறைக்கு இணையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கான செலவு குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருவதாக அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் டாக்சிகள் பயணிகளை இறக்கி விடுவதற்காகச் செனாய் அனைத்துலக விமான நிலையம், ஜே.பி சென்ட்ரல், மெதினி, சவுத்கீ, மவுண்ட் ஆஸ்டின், ஈக்கோ பொட்டானிக் உள்பட பன்னிரண்டு முக்கிய இடங்களை மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. ஜோகூர் பிரீமியம் அவுட்லெட் (JPO) போன்ற ஆறு வணிக வளாகங்களும் இதில் அடங்கும்.

அதேபோல், மலேசிய டாக்சிகள் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், கிராஞ்சி, ஜூரோங், ஷென்டன் வே, ரோச்சர் ரோடு ஆகிய ஐந்து இடங்களில் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தற்போது லர்க்கின் சென்ட்ரல் முனையத்திலிருந்து சிங்கப்பூரின் பான் சான் சாலைக்குச் செல்ல 120 ரிங்கிட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் வர 60 சிங்கப்பூர் டாலர் வசூலிக்கப்படுகிறது.

புதிய நடைமுறையின்கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான டாக்சிகளின் எண்ணிக்கை 200லிருந்து 500ஆக உயர்த்தப்பட உள்ளது.

சட்டவிரோதப் பயணங்களைத் தவிர்க்கவும் ஒருமைப்பாட்டைப் பேணவும் அங்கீகரிக்கப்பட்ட டாக்சிகள் சிறப்பு அடையாளங்களுடன் இயங்கும். இந்தப் புதிய போக்குவரத்து முன்னெடுப்பு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாடாக்சிஜோகூர்ஜோகூர் பாருவாகனம்கட்டணம்கண்காணிப்பு கேமராஎல்லைபோக்குவரத்துசிங்கப்பூர்