ஜோகூர்பாரு: மலேசியாவின் இணையவழி ஊழியர்கள், ஜோகூரில் இயங்கும் கடன் முதலைகளால் ஏமாற்றப்பட்டு சிங்கப்பூரில் நடந்த சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இணையத்தில் ஏதாவது விநியோக வேலைகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்து பணியாற்றும் அவர்கள் எளிதாக கடன்முதலைகளில் வலையில் விழுகின்றனர்.
சிங்கப்பூரில் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்துவதற்காக மலேசிய இணையவழி ஊழியர்களைக் கடன் முதலைகள் (கந்துவட்டிக் கும்பல்) பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் விநியோகிக்கும் பொட்டலங்கள் சிங்கப்பூரின் இன, சமயச் சட்டங்களுக்கு முரணாக அமையும்போது, இந்த ஊழியர்களே தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.
இங்கு கடன்முதலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நன்கு உணர்ந்து, அவற்றைத் தவிர்க்க ஜோகூரில் இயங்கும் கடன் முதலைகள் அவ்வாறு மலேசிய இணைய ஊழியர்களை ஏமாற்றுகின்றனர் என்பது கண்டறியப்பட்டது.
இதன் விவரங்களை மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் வியாழக்கிழமை (மே 7) வெளியிட்டது.
சமய அவமதிப்புக் குற்றம்
மேலும் சிங்கப்பூரின் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ், ஒருவரின் சமய நம்பிக்கையை அவமதித்த குற்றங்களையும் விநியோக ஊழியர்கள் அறியாமலேயே புரிந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக, கடன் பெற்ற இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவரின் வீட்டுக்குப் பன்றி இறைச்சிப் பொட்டலம் அனுப்பப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடலாம். ஜோகூரில் இருந்து இங்கு வந்து அதனை விநியோகித்த ஊழியருக்குத் தாம் எடுத்துவந்த பொட்டலத்தைப் பற்றித் தெரியாது என்று விசாரணையில் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
முதல்முறை குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்குக் குறைந்தபட்சமாக இரண்டு ஆண்டு சிறையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அதே குற்றத்தை மீண்டும் புரிவோருக்குத் தண்டனை இரட்டிப்பாகும்.
வீட்டின் கம்பி வேலிகளைப் பூட்டுதல், கதவுகள்மீது சாயம் வீசி எறிதல், தீ மூட்டுதல் போன்ற குற்றங்களை யாரும் எளிதில் செய்யமுடியாத வகையில் இங்கு கண்காணிப்புக் கேமராக்கள் பரவலாகப் பொருத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் சட்டங்கள் இவைபோன்ற குற்றங்களுக்குக் கைதாகும் ஊழியர்களுக்குக் கருணை காட்டும் வகையில் இல்லை என்பதை ஜோகூரின் கடன் முதலைக் கும்பல்கள் நன்கு அறிந்துள்ளன.
டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் வேலை வாய்ப்புகள் பற்றி விளம்பரப்படுத்தி, சுயமாகப் பணியாற்றும் விநியோகச் சேவை ஊழியர்களை நேரில் காணாமலேயே கும்பல் பணியமர்த்துகிறது.
கும்பலிடம் கடன் பெற்றவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பொருள்களைக் கொடுத்து, அதற்கான கட்டணங்களை விநியோகச் சேவை வழங்கும் ஊழியருக்கு இணையத்தில் செலுத்தி சிங்கப்பூருக்குள் அவை அனுப்பிவைக்கின்றன.
சிங்கப்பூர் காவல்துறைக்கு கடன் முதலைகளால் அனுப்பிவைக்கப்பட்ட மிரட்டல் பொட்டலங்கள் குறித்து பல புகார்கள் கிடைத்துள்ளன.
இதுவரை 10 விநியோக ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

