எரிசக்தி கட்டணங்களைச் சமாளிக்க $4 பில்லியன் நிதி ஒதுக்கிய ஜப்பான்

எரிசக்தி கட்டணங்களைச் சமாளிக்க $4 பில்லியன் நிதி ஒதுக்கிய ஜப்பான்

1 mins read
305ef578-9adf-4476-bad7-18f888d82d43
ஜூலை மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கான கட்டணங்களை ஈடுகட்ட இந்த நிதியுதவி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: புளூம்பெர்க்
Google News Preferred Icon

தோக்கியோ: மத்திய கிழக்குப் போர் காரணமாகப் பொதுப் பயனீட்டுக் கட்டணங்கள் அதிகரித்துள்ள வேளையில், குடும்பங்கள் தங்களின் மின், எரிவாயுக் கட்டணங்களைச் செலுத்த உதவுவதற்காக 3.23 பில்லியன் அமெரிக்க டாலர் ($4.12 பில்லியன்) நிதியை ஜப்பான் ஒதுக்கியது.

அதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (மே 26) வழங்கியது.

பெரும்பாலான ஆசிய நாடுகள் போலவே, ஜப்பானும் மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளையே பெரிதும் சார்ந்துள்ளது. அத்துடன், ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை எதிர்கொள்ளவும் அது நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்துவரும் அன்றாடப் பொருள்களின் விலைகளைக் கையாள்வதற்காக, 19 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கூடுதல் வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குவதற்கான அறிவிப்பை ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி வெளியிட்ட அடுத்த நாளே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கான கட்டணங்களை ஈடுகட்ட இந்த நிதியுதவி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மின், எரிவாயுக் கட்டணங்களுக்கு ஆதரவளிக்க, 513.5 பில்லியன் யென் ($4.12 பில்லியன்) நிதி ஒதுக்க மே 26ஆம் தேதி கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என அமைச்சரவைக்கான துணைத் தலைமைச் செயலாளர் மசானோ ஒசாகி தெரிவித்தார்.

இந்த மானியங்களுக்கான நிதி, நடப்பு நிதியாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள வைப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்