காஸா மீது இஸ்‌ரேல் தாக்குதல்: நால்வர் பலி

காஸா மீது இஸ்‌ரேல் தாக்குதல்: நால்வர் பலி

2 mins read
e5f06bbf-63ab-4e16-aa15-2eb764d6f2b2
காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆடவர் ஒருவரும் 8 வயது சிறுமியும் உயிரிழந்தனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

கெய்ரோ: காஸா முனையில் அமெரிக்கா முன்னெடுக்கும் அமைதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையிலும், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இரு குழந்தைகள் உட்பட குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆடவர் ஒருவரும் 8 வயது சிறுமியும் உயிரிழந்தனர். மத்திய காஸாவில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 18 மாதக் குழந்தை மாண்டதுடன், எட்டுப் பேர் காயமடைந்தனர்.

மேலும், காஸா நகரில் மிதிவண்டியில் சென்ற பாலஸ்தீனியரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 10 பேர் காயமடைந்தனர். ஹமாஸ் போராளிகளையே இலக்கு வைத்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

சிரியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் வழிநடத்தும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் இதுவரை 1,200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலும் கலைத்து ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

எனினும், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தி படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கனரக ஆயுதங்களைப் பாலஸ்தீன அமைப்பிடம் ஒப்படைத்து, பாதுகாப்பாக வைக்கத் தயார் என்றும் ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 2 மில்லியனாகும். போரின் காரணமாக அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் கடலோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் அல்லது அங்குள்ள சேதமடைந்த கட்டடங்களில் தங்கி வருகின்றனர். அவர்கள் இருக்கும் பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்
காஸாஇஸ்‌ரேல்மரணம்தாக்குதல்