ஜெருசலம்: காஸா பகுதியில் உள்ள இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டை தற்போதுள்ள 60 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக விரிவுபடுத்துமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ராணுவத்திற்கு அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் அமைந்துள்ள இஸ்ரேலியக் குடியேற்றப் பகுதியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், ‘ஹீப்ரு’ மொழியில் காணொளி அறிக்கை ஒன்றை வெளியிட்ட பிரதமர் நெட்டன்யாகு அதனை உறுதிப்படுத்தினார்.
“ஹமாஸ் அமைப்பைச் சுருக்கி, அதன் பிடியை இஸ்ரேல் பலவீனப்படுத்தி வருகிறது. காஸாவின் 60 விழுக்காட்டுப் பகுதியை இப்போது எங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். முன்னதாக 50 விழுக்காடாக இருந்ததை 60ஆக உயர்த்தினோம்.
‘‘இப்போது அதை 70 விழுக்காடாக மாற்ற வேண்டும் என்பதே எனது உத்தரவு,” என்று திரு நெட்டன்யாகு கூறினார்.
இதற்கிடையே, அந்தக் காணொளியைப் பார்த்தவர்களில் சிலர், “100 விழுக்காட்டையும் இஸ்ரேல் முழுமையாகப் கைப்பற்ற வேண்டும்,” எனக் கூறியதற்கு, “நாம் படிப்படியாக நகர்கிறோம். முதலில் 70 விழுக்காட்டைக் கைப்பற்றுவோம்,” என்று திரு நெட்டன்யாகு பதிலளித்தார்.
இஸ்ரேலின் அந்தப் புதிய நடவடிக்கை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் ஹமாஸ், இஸ்ரேல் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
போர்நிறுத்தத்தின் முதற்கட்டமாக பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டபோதிலும், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் கைவிடுவதற்கும் இஸ்ரேலிய ராணுவத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்குமான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாகவே முடங்கியுள்ளன.
இந்நிலையில்தான், போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி காஸாவின் பெரும்பாலான பகுதிகளைத் தன்வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

