ஈரான் ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேல் தகவல்

ஈரான் ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேல் தகவல்

1 mins read
61a4077f-d77d-48db-be57-e6b8965e6a3f
இஸ்ரேலின் நெத்தன்யா நகருக்கு மேலே புதன்கிழமை (ஏப்ரல் 8) வானத்தில் ஏவுகணைகள் சென்ற தடம் காணப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜெருசலம்: ஈரானிய உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை தாம் இரு வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த சில நிமிடங்களிலேயே, இஸ்ரேல்மீது ஈரான் ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேலிய ராணுவம் புதன்கிழமை (ஏப்ரல் 8) காலை அடுத்தடுத்து மூன்று எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

“இஸ்ரேலின் நிலப்பரப்பை நோக்கி ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் கண்டறிந்துள்ளது. இந்த அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்துவதற்குப் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன,” என்று ராணுவம் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டது.

ஜெருசலம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெரிக்கோ பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பதுங்கு குழிகளில் தஞ்சமடையுமாறு இஸ்ரேலிய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. புதன்கிழமை காலை முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதேபோன்ற மற்றோர் எச்சரிக்கையும் அதன்பின் ஒரு மணி நேரத்திற்குள் மூன்றாவது எச்சரிக்கையும் ராணுவத்தால் விடுக்கப்பட்டது.

லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் எண்மர் மரணம்

இதற்கிடையே, லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எண்மர் கொல்லப்பட்டதோடு 22 பேர் காயமடைந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

“சிடோன் கடற்கரைச் சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் இரண்டு குழுக்களை அங்கு அனுப்பினோம், ஆனால், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதல் உதவிக் குழுக்களை குழுவினர் கோரினர்,” என்று உள்ளூர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்இஸ்ரேல்டோனல்ட் டிரம்ப்அமெரிக்காபோர்