பெய்ரூட்: இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்ட பத்து நாள் சண்டைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நடப்புக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்புக்குத் தாம் ஏற்பாடு செய்துவருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - லெபனான் சண்டைநிறுத்தம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவுமுதல் (சிங்கப்பூர் நேரம் வெள்ளிக்கிழமை காலை 5 மணி) நடப்புக்கு வந்துவிட்டதாக திரு டிரம்ப் அறிவித்தார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் லெபனான் அதிபர் ஜோசப் ஆவுனும் தொலைபேசி வாயிலாக மேற்கொண்ட சிறப்பான உரையாடல்களுக்குப் பின்னரே, சண்டையை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்ட அமெரிக்கா முயன்றுவரும் வேளையில், லெபனான்மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் கைவிட்டு சண்டைநிறுத்தத்திற்கு முன்வர வேண்டும் என டெஹ்ரான் வலியுறுத்தியது. உடன்பாட்டில் அதுவும் ஓர் அம்சமாகச் சேர்க்கப்பட வேண்டும் என்கிறது ஈரான்.
சண்டைநிறுத்தம் அமலுக்கு வந்த வேளையில், ஹிஸ்புல்லாவின் மையப்பகுதியான பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் ஒலித்ததாகவும் அது சண்டைநிறுத்தத்தைக் கொண்டாடுவதற்கான வெளிப்பாடாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
எனினும், அதனை உறுதிசெய்ய இயலவில்லை என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானைத் தாக்கியபோது மத்திய கிழக்கு போர் தொடங்கியது. தொடர்ந்து, ஈரான் ஆதரவுபெற்ற ஹிஸ்புல்லா படையினர் மார்ச் 2ஆம் தேதி இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியதால் லெபனானும் போருக்குள் வந்தது.
தொடர்புடைய செய்திகள்
அப்போது முதல், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்திய தாக்குதல்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் லெபனானில் இடம்பெயர்ந்துவிட்டனர். தாக்குதல் நடத்தி முன்னேறிய இஸ்ரேலிய தரைப்படைகள் லெபனானின் தெற்குப் பகுதியை ஆக்கிரமித்துவிட்டன.
ஈரான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோது, தெற்கு லெபனானில் உள்ள 380க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியிருந்தது.

