ஜெரூசலம்: மே மாதம் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புதல் வழங்கிய பிறகும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா போராளிகளை வேட்டையாடுவதாகக் கூறி, லெபனானின் தென் வட்டாரங்களில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தது.
லெபனானில் ஹிஸ்புல்லாப் படையை குறிவைத்து இஸ்ரேல் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியது. அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதில் அதை ஒரு நிபந்தனையாகவும் ஈரான் முன்வைத்தது.
இந்நிலையில், முழு சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல், லெபனான் இருநாடுகளும் உடன்படிக்கை ஒன்றை எட்டியுள்ளதாக புதன்கிழமை (ஜூன் 3) அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதன்வழியாக, அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மத்திய கிழக்கு பூசல் ஒரு முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் அறிவிப்புக்கு முன்னதாக, ஈரான் குவைத்தின் விமான நிலையம் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். ஹோர்முஸ் நீரிணை அருகில் அமெரிக்கப் படைகளும் ஈரானின் ராணுவத் தளவாடங்களைத் தாக்கியது.
ஹிஸ்புல்லாவின் நிலை
இஸ்ரேல், லெபனான் அமைதி உடன்படிக்கையின்படி, ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, தென் லெபனானில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும்.
ஹிஸ்புல்லா வெளியேறிய இடங்களை லெபனானின் ராணுவம் அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். இதன் விவரங்களை சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை வாஷிங்டனில் தலைமையேற்று நடத்திய அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிவித்தது.
டெஹ்ரானுக்கு ஆதரவாக எல்லை தாண்டித் துப்பாக்கிச் சூடு நடத்திய ஹிஸ்புல்லாவைத் துரத்திச் செல்லும் விதமாக, இஸ்ரேல் மார்ச் மாதம் லெபனான் மீது படையெடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு விரிவான ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில், இரு நாடுகளும் ஜூன் 22ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் அரசியல், பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த மீண்டும் கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஜூன் 3ஆம் தேதியன்று லெபனான் ஒளிபரப்பு நிறுவனமான அல் மயாதீனிடம் தெரிவித்தார்.
லெபனானில் சண்டைகள் முடிவுக்கு வருவதை ஒப்பந்தத்திற்கான நிபந்தனையாக டெஹ்ரான் விதித்ததோடு, பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான எண்ணெய் வருவாய்க்கான அணுகல், கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளில் இருந்து விலக்கு, அதன் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை நீக்குதல் மற்றும் நீரிணையின் மீது தொடர்ச்சியான செல்வாக்கு ஆகியவற்றையும் அது விரும்புகிறது.
எரிபொருள் விலைகளைக் குறைக்க அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் அணுவாயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதே தனது முதன்மையான முன்னுரிமை என்று கூறியுள்ளார்.

