ஹமாஸிடமிருந்து ஆயுதங்களைக் களைவதில் கவனம் செலுத்தும் இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து ஆயுதங்களைக் களைவதில் கவனம் செலுத்தும் இஸ்ரேல்

2 mins read
93ed79d4-a76f-4459-b45f-2dc7e42c7254
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காஸாவில் பாலஸ்தீனத் தனி நாடு அமைவதைத் தடுக்கப்போவதாகக் கூறுகிறார். - படம்: இபிஏ

ஜெருசலம்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, ஹமாஸ் குழுவிடமிருந்து ஆயுதங்களை அகற்றுவதில் கவனம் செலுத்தப்போவதாகக் கூறியிருக்கிறார்.

காஸாவை ராணுவமற்ற பகுதியாக மாற்றவும் முயற்சி எடுக்கப்படும் என்றார் அவர். பாலஸ்தீன வட்டாரத்திலிருந்து இறுதிப் பிணையாளி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு நெட்டன்யாகுவின் கருத்துகள் வந்துள்ளன.

அந்த இரண்டும் நிறைவேற்றப்படும் வரை காஸாவில் எந்தவொரு மறுநிர்மாணப் பணியும் இடம்பெறமாட்டாது என்று அவர் சொன்னார்.

காஸாவில் பாலஸ்தீனத் தனி நாடு அமைவதைத் தடுக்கப்போவதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் சூளுரைத்தார். காஸாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குப் பகுதியிலும் இஸ்ரேல் தொடர்ந்து பாதுகாப்பைக் கட்டிக்காக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலக அளவில் பல நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்துவரும் வேளையில் திரு நெட்டன்யாகு அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா முன்னெடுத்த சண்டைநிறுத்தத் திட்டம் சென்ற ஆண்டு (2025) அக்டோபர் 10ஆம் தேதி முதல் நடப்பில் உள்ளது. அதன் முதற்கட்டத்தின்படி, ஹமாஸ் அதன் வசமுள்ள பிணையாளிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்; இரண்டாம் கட்டத்தில், ஹமாஸ் அதன் ஆயுதங்களை முழுமையாகக் களைய வேண்டும்.

“இரண்டுமே எளிமையான வழியில் செய்யப்படும் அல்லது கடுமையான முறையில் கையாளப்படும். எப்படி இருந்தாலும் அது நடக்கும்,” என்றார் திரு நெட்டன்யாகு.

ஹமாஸ் குழுவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலின்போது 251 பேரைப் பிணைபிடித்தனர். அது காஸா போருக்கு வித்திட்டது. பிணையாளிகளில் எஞ்சியிருந்த திரு ரான் குவிலியின் சடலத்தை இம்மாதம் (ஜனவரி) 26ஆம் தேதி இஸ்ரேலியப் படைகள் தாயகத்திற்குக் கொண்டுவந்தன.

திரு குவிலியின் உடல் ஒப்படைக்கப்பட்டது, சண்டைநிறுத்த ஒப்பந்தத்தின்மீது தான் கொண்டுள்ள கடப்பாட்டைக் காட்டுவதாக ஹமாஸ் குறிப்பிட்டது. ஆயினும் அது இன்னும் ஆயுதங்களைக் களையவில்லை. அவ்வாறு ஆயுதங்களைக் களையச் சொல்லும் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஹமாஸ் தெரிவித்தது. ஆனால் ஆயுதங்களைப் பாலஸ்தீனப் பகுதியை ஆட்சி செய்யும் ஆணையத்திடம் கொடுக்கத் தயாராய் இருப்பதாக அது கூறியது.

குறிப்புச் சொற்கள்