ஈரானின் புதிய தலைவராக மொஜ்தபா காமெனி தேர்வு

ஈரானின் புதிய தலைவராக மொஜ்தபா காமெனி தேர்வு

2 mins read
தாக்குதலில் குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதால், அமெரிக்க-இஸ்ரேல் நாடுகளுடன் சமரசப் போக்கை அவர் மேற்கொள்ளமாட்டார்.
674abfc7-9e79-4420-a28f-f6ce0345f5f7
கடந்த 2024ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமெனியின் படம். - படம்: ஏஎஃப்பி

துபாய் / ஜெருசலம்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மிரட்டலையும் கடந்து, ஈரானின் ஆட்சியாளர்கள், மறைந்த தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மகன் மொஜ்தபா காமெனியை நாட்டின் புதிய தலைவராக அறிவித்துள்ளனர்.

அறிவிப்பு வெளிவந்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்காவும் இஸ்ரேலும் புதிய தலைவர் நெடுநாள் நீடிக்கமாட்டார் என எச்சரித்துள்ளன.

அண்மையில் ஈரானின் புதிய தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் தமக்கு முக்கியப் பங்குள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். மறைந்த தலைவரின் மகன் பொருத்தமானவர் அல்லர் என்றும் அவர் கூறியிருந்தார்.

அமெரிக்காவை நேரடியாகச் சாடுவதற்கே ஈரானின் ஆட்சியாளர்கள் திரு மொஜ்தபாவைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்த முடிவின் வழியாக ஈரான் ஆட்சியாளர்கள், நாடு தங்கள் கைவசம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்று கருதப்படுகிறது.

ஈரானிய அரசமைப்பின்படி, அதன் தலைவர் வெளியுறவுக் கொள்கை, அணுசக்தித் திட்டம், புரட்சிக் காவல்படை ஆகியவற்றின் மீதான இறுதி அதிகாரங்களுக்குப் பொறுப்பேற்பார். அதோடு, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அதிபருக்கும், நாடாளுமன்றத்துக்கும் அவரே வழிகாட்டியாகச் செயல்படுவார்.

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபாவின் குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதால், அந்நாடுகளுடன் சமரசப் போக்கை அவர் மேற்கொள்ளமாட்டார் என்பது பலரின் கணிப்பாக உள்ளது.

வெளிநாடுவாழ் ஈரானியர்களுக்கு எச்சரிக்கை

இதனிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை ஆதரிக்கும் வெளிநாடுவாழ் ஈரானியர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சட்ட அடிப்படையிலான மற்ற தண்டனைகளை எதிர்கொள்வர் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

தாக்குதலில் ஈரானிய உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதை அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களின் வீதிகளில் இறங்கி புலம்பெயர் ஈரானியர்களில் சிலர் கொண்டாடினர். அவர்கள் ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்புபவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, அத்தகையோர்மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று ஈரானியத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் ஏறக்குறைய ஐந்து மில்லியன் ஈரானியர்கள் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் வாழ்வதாக ஈரானிய அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன்வரை இருக்கும் என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்