வளைகுடா நாடுகள்மீது ஈரான் சரமாரி எறிகணைத் தாக்குதல்

வளைகுடா நாடுகள்மீது ஈரான் சரமாரி எறிகணைத் தாக்குதல்

2 mins read
85546fff-943e-4e06-be1e-8fc834531436
ஈரான் திங்கட்கிழமை (மார்ச் 30) நடத்திய தாக்குதலால் இஸ்ரேலின் ஹைஃபாவில் பற்றியெரியும் எண்ணெய்க் கலன். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டெஹ்ரான்: ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நடுவம், மின்னிலையங்கள், கடல்நீரை நன்னீராக்கும் ஆலைகள் ஆகியவற்றைக் கைப்பற்றப்போவதாக அமெரிக்க அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, வளைகுடா நாடுகளில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) ஈரான் சரிமாரியாக எறிகணைத் தாக்குதல் நடத்தியது.

தன்மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவின் ஏவுதளமாக அந்நாடுகள் விளங்குகின்றன என்று ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஈரானியத் தாக்குதலால் துபாயில் நால்வர் காயமுற்றனர். அந்நகரின் துறைமுகப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த குவைத் எண்ணெய்க் கலன் தீப்பற்றி எரிந்தது.

ஈரானின் எட்டு எறிகணைகளை இடைமறித்ததாக சவூதி அரேபியா குறிப்பிட்டது. சவூதியிலுள்ள அமெரிக்கப் படைகளை வெளியேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே, தன்னுடைய ராணுவ இலக்குகளில் பாதிக்கு மேற்பட்டவற்றை எட்டிவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள தொழிற்பேட்டைகளை முற்றிலும் அழித்துவிட்டதாகவும் அவர்களது ஆயுதத் தொழில்துறையைக் கிட்டத்தட்ட துடைத்தொழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“போரின் நடுப்பகுதியைத் தாண்டிவிட்டோம். ஆனாலும், அது எப்போது முடியும் என்பதைக் கூற விரும்பவில்லை,” என்றார் அவர்.

டெஹ்ரானின் மேற்குப் பகுதியில் உள்ள ராணுவக் கட்டமைப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவிருப்பதால் அப்பகுதியிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

முன்னதாக, போர் வாரக்கணக்கில் தொடரும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ திங்கட்கிழமை கூறியிருந்தார்.

இதற்கிடையே, தெற்கு லெபனானில் நடந்த சண்டையில் தனது படையினர் நால்வரை இழந்துவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

தலைநகர் டெஹ்ரான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அந்நகரின் சில இடங்களில் மின்விநியோகம் தடைபட்டதாக ஈரான் தெரிவித்தது.

அத்துடன், லெபனானையும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. ஈரான் ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா, லெபனானிலிருந்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருவதே அதற்குக் காரணம்.

ஏமனிலுள்ள ஈரான் ஆதரவு ஹூதிப் படையினரும் கடந்த வாரம் இஸ்ரேல்மீது எறிகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் செலுத்தி தாக்குதல் நடத்தின.

குறிப்புச் சொற்கள்
ஈரான்இஸ்ரேல்ஈரான் போர்தாக்குதல்வளைகுடா