ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டார்

ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டார்

2 mins read
புரட்சிக் காவல் படையின் முக்கியத் தலைவர்களும் அணுவாயுதத் தயாரிப்புக்கான உயரதிகாரிகளும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
a616f2d6-176c-40ab-99fe-25214d27f86a
கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ல் தொலைக்காட்சியில் ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி உரையாற்றும் படம். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

வாஷிங்டன்/ஜெருசலம்/துபாய்/தோஹா: ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி அந்நாட்டின்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திவரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்துள்ளார்.

ஈரானிய அரசு ஊடகங்கள் இதனை உறுதி செய்துள்ளன.

அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்திடம் இஸ்ரேலிய மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். ஈரானியத் தலைவருடன் மேலும் பல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது.

தலைவரின் மறைவை ஈரானின் அரசாங்க ஊடகம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) உறுதிப்படுத்தியுள்ளது. அவரின் நினைவாக 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் ஏழு நாள்கள் பொது விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மறைந்த ஈரானியத் தலைவரின் உடல் புகைப்படமாக அமெரிக்க அதிபருக்கும், இஸ்ரேலியப் பிரதமருக்கும் காட்டப்பட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானியத் தலைவருடன் புரட்சிக் காவல் படையின் முக்கியத் தலைவர்களும் அணுவாயுதத் தயாரிப்புக்கான உயர் அதிகாரிகளும் தாக்குதலில் மாண்டுவிட்டனர் என்று இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு கூறியுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தோரில் ஈரான் தற்காப்பு அமைச்சர் அமிர் நஸிர்சாடே, புரட்சிக் காவல் படையின் தளபதி முகம்மது பக்பொர் ஆகியோரும் அடங்குவர்.

உயரதிகாரிகள் பலர் கொல்லப்பட்டனர்

ஈரானிய ஊடகங்கள், தலைவர் அயத்துல்லாவின் மருமகனும் மருமகளும் தாக்குதலில் மாண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளன.

இந்த செய்திகளைக் கேட்டு ஈரானியத் தலைநகரில் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்கா ராணுவ, அணுவாயுதத் தளங்களையும் இஸ்ரேல் ஈரானியத் தலைமைத்துவத்தையும் குறிவைத்துள்ளன என்று நம்பப்படுகிறது.

பதிலடியாக ஈரான் இஸ்ரேல் உட்பட அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் உள்ள ஏழு மத்தியக் கிழக்கு நாடுகள்மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியதில் இதுவரை பெருஞ்சேதம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய மக்கள் தங்களது அரசாங்கத்தைப் புறக்கணித்து கவிழ்த்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ஐக்கிய நாட்டு நிறுவனம் உடனடியாக போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானியத் தற்காப்புப் படைகள் உடனடியாக ஆயுதங்களை கைவிடுமாறு அறிவுரைத்தார். தங்கள் நாட்டை திரும்பப் பெற்றிட ஈரானிய மக்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காஇஸ்‌ரேல்மத்திய கிழக்குபோர்விமானப் படை