டெஹ்ரான்: போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் பின்னடைவைச் சந்தித்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலையும் குறிவைத்துத் தாக்கவிருப்பதாக ஈரானிய ராணுவம் வியாழக்கிழமை (ஜூன் 11) தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிதாகத் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தத் தகவல் வெளிவந்தது.
ஈரானியத் தரப்பு தங்களை ஏமாற்றப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்நாட்டைக் கடுமையாகத் தாக்கப்போவதாகச் சூளுரைத்திருந்தார்.
குவைத், பஹ்ரேனில் உள்ள விமானப் படைத்தளங்களில் உள்ள 18 அமெரிக்க ராணுவ வசதிகள்மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதாக பஹ்ரேனின் உள்துறை அமைச்சு கூறியது.
இருப்பினும், நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் கூறியதை அமெரிக்க ராணுவம், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் மறுத்துள்ளது, “வர்த்தகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தொடர்ந்து பயணம் செய்து வருகின்றன,” என்று அது கூறியுள்ளது.
ஆனால், ஹோர்முஸ் நீரிணை வழியாக சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஈரானியக் கப்பற்படை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவும் ஈரானும் வியாழக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல்களை இருபக்கமாக நடத்தி வந்தன.
ஈரான் உடனடியாக அமைதி ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை என்றால் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்காவின் அபாச்சி (Apache) ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து இந்த வாரம் மோதல்கள் தீவிரமடையத் தொடங்கின.
இந்த மோதல்களால் ஈரான் முழுவதிலும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கத் தளங்களிலும் பதிலடித் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகின்றன.
ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஆகக் கடுமையான அச்சுறுத்தல் இது எனக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்திய கடும் வான்வழித் தாக்குதல்களுடன் தொடங்கிய போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நம்பிக்கைகளை இது மங்கச் செய்துள்ளது.

