எல்லை கடக்கும் மலேசியர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஆண்டிறுதிக்குள் வரலாம்: அமைச்சர் ரமணன்

எல்லை கடக்கும் மலேசியர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஆண்டிறுதிக்குள் வரலாம்: அமைச்சர் ரமணன்

2 mins read
07ca07ef-eb7c-43c5-9d06-09a02aaffa20
மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன். - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: வேலைக்காக அன்றாடம் வெளிநாடு சென்று திரும்பும் மலேசியர்களுக்கான காப்புறுதித் திட்டம் இவ்வாண்டின் இறுதிக்குள் தயாராகிவிடும் என எதிர்பார்ப்பதாக மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

“காப்புறுதித் திட்டத்தில் இடம்பெறும் அம்சங்களை சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Perkeso) கவனித்து வருகிறது. குறைந்த வருமான ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியமாக அந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

“புதிய காப்புறுதித் திட்டத்தை அமைச்சரவையின் பரிசீலனைக்குக் கொண்டுவரும் வகையில், அதுகுறித்த ஆய்வை விரைந்து முடிக்குமாறு அந்த அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றார் திரு ரமணன்.

அந்த ஆய்வு பெரும்பாலும் மார்ச் மாதத்தில் நிறைவடையக்கூடும் என்றார் அவர்.

இதுதொடர்பாக அவர் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நாள்தோறும் வெளிநாடு சென்று வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் மலேசியர்கள் சந்திக்கும் ஆபத்துகள் குறித்து ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதர அமைப்பு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் புதிய காப்புறுதித் திட்டம் செயல்வடிவம் பெறுவதாக திரு ரமணன் சொன்னார்.

“குடும்பம் நடத்துவதற்குத் தேவையான சம்பளத்துக்காக நாடுகடந்து வேலை செய்துவிட்டுத் திரும்பும் தங்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்ன செய்வது என மலேசிய ஊழியர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

“ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு நாளும் அனைத்துலக எல்லையைக் கடந்து சென்று வேலை செய்கிறார்கள்.

“எனவே, நாட்டின் எல்லைக்கு அப்பாலும் அவர்களைப் பாதுகாப்பதும் பொறுப்புடன் கவனித்துக்கொள்வதும் அவசியமாகிறது.

“பரிசீலிக்கப்பட்டு வரும் காப்புறுதித் திட்டம் அவர்களுக்கான பாதுகாப்பில் உள்ள இடைவெளியை நிரப்பும். குறிப்பாக, நாட்டுக்கு வெளியே சென்று வேலை செய்யும்போது காயமடைவோருக்கு முழுமையான தீர்வளிக்கும் காப்புறுதி இல்லை என்ற குறை நீங்கும்.

“தற்போது மலேசியாவில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தி வரும் வேலையிட உடற்சேதக் காப்புறுதித் திட்டத்தை வெளிநாட்டு வேலைக்கும் பொருந்தும் வகையில் மாற்றலாமா என்பது பற்றியும் பரிசீலிக்கப்படுகிறது.

“வேலையிடத்தில் காயமடைவோருக்கான காப்புறுதி என்பது வெறும் மருத்துவச் செலவுகளுக்கானது மட்டுமன்று. காயத்திலிருந்து மீளும்போது அவர்களுக்கு வருமானப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

“நிலைமை கைமீறிச் செல்லும்போது நிதிச் சிக்கல்கள் அவர்களைப் பாதிக்காது என்பதை உறுதிசெய்ய வேண்டும்,” என்று விளக்கினார் அமைச்சர் ரமணன்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகாப்புறுதிமனிதவள அமைச்சு